மதுரை, ஜூலை 7: மதுரை மற்றும் சுற்றுப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்ச்சத்து மூலமாக வெளியேறுகிறது.
அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர் அதிகளவில் உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற கனிமச் சத்துகள் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன. மேலும் இளநீரில் வைட்டமின் சத்து அதிகளவில் உள்ளது. இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், சிறுநீரக பிரச்னைகளையும் போக்கக்கூடியது என்பதால் பொதுமக்கள் இளநீர் பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக நகரில் இளநீர் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.