தகடூர், தர்மபுரிஅகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தி கல்யாண காமாட்சியாக அருட்கோலம் காட்டும் தலமே தர்மபுரி மாவட்டத்திலுள்ள தகடூர் எனும் ஊராகும். ராவண வதம் முடித்தபிறகு பிரம்மஹத்தி தோஷம் ராமரைப் பற்றியது. அதைப் போக்க ராமேஸ்வரத்தில் சமுத்திர மணலை எடுத்து ஈசனை லிங்க உருவில் குழைத்து நாள் தவறாது பூஜித்தார். கடல் அலைகள் பிரம்மஹத்தி தோஷத்தை தம்மோடு கரைத்துக் கொண்டன. தோஷம் விடுபட்ட ராமர், சூரியனாக ஜொலித்தார். ஆயினும், பிரம்மஹத்தி தோஷத்தின் வீர்யம் புகை போன்று சுழன்று கொண்டிருந்தது. அகத்தியரை நாடினார். அகத்தியர் ‘‘ராகவா உனக்கு ஒரு குறையும் ஏற்படாது. நீ தீர்த்தமலை சென்று வா. உன்னைச் சுழற்றும் இந்த தோஷம் பரிபூரணமாக நீங்கும். கல்யாண காமாட்சி உன் கலக்கம் தீர்ப்பாள்,’’ என்றார். அதேசமயம், குமார சம்பவம் நடைபெற வேண்டுமென தேவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மன்மதன் தன் தூண்டுதலால் அது நிகழும் என்று சற்று கர்வம் கொண்டிருந்தான். ஈசனை தன் ஆளுமையில் கொண்டுவரத் துடித்தான். ஈசனை சூழ நினைத்தான். ஆனால் சிவனின் ஞானாக்னி மன்மதன் எனும் காமத்தை பொசுக்கியது. வெற்றுச் சாம்பலானான் மன்மதன். உடலற்றவனானதால் அனங்கன் என்று அழைக்கப்பட்டான். பார்வதி இச்செயலைக் கண்டு வருந்தினாள். மன்மத பாணமே தோற்றுவிட்டதால் தான் ஈசனுடன் இணைய இயலாது போய்விடுமோ என்று மனம் உடைந்தாள். பூவுலகில் தவம் செய்து ஈசனோடு மீண்டும் இணைய உறுதி கொண்டாள். தகடூரில் ஸ்ரீசக்ரம் அமைத்து மாதவத்தில் ஆழ்ந்தாள் அன்னை. ஈசனும் அந்த தவத்தில் கரைந்தார். சட்டென்று தரிசனம் தந்தார். தவத்தில் உறைந்திருந்த நாயகியின் முகம் சிவனைக் கண்டதும் பூரித்துச் சிவந்தது. மலைமகள் திருமணக் களை கொண்டாள். ஈசனும் அத்தலத்திலேயே அவளை மணந்ததோடு மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டுமே தோன்றுமாறு செய்தார். மன்மதன் மகிழ்ந்தான். ரதி தேவி ஈசனின் திருவடி வீழ்ந்து பரவினாள். மன்மதனைக் காத்த கல்யாண காமாட்சி சக்தி பீடத்தின் மத்தியில் அமர்ந்து பேரருள் பெருக்கினாள். இத்தலத்திற்கு ராமனையும் சென்றுவரச்சொல்லி, வசந்த நவராத்திரி பூஜை முறைகளையும் உபதேசித்தார் அகத்தியர். ராமர் சக்தி பீடத்தை நெருங்கியபோதே பிரம்மஹத்தி தோஷமானது முற்றிலுமாக மறைந்தது. தர்மபுரி எனும் இத்தலத்தில் மன்மதனை உயிர்ப்பித்ததற்கு ஆதாரமாக இருந்த அன்னை, போக காமாட்சியாக அருள் கூட்டி அமர்ந்தாள். ஆலயத்துக்குள் நுழைந்தவுடன் செல்வ விநாயகரும், அவரை அடுத்து ஆறுமுகம் கொண்ட ஷண்முகநாதனும் தரிசனமளிக்கின்றனர். அடுத்து தலத்தின் பிரதான நாயகி, ஐம்பது அடிக்கும் மேலாக உயர்ந்த இடத்தில் ஸ்ரீசக்ர மேடை மேல் நின்று அருளுகிறாள். அன்னையின் பதினாறு துணை சக்திகளும், பதினெட்டு யானைகள், ஸ்ரீசக்ர சந்நதியில் கொலுவீற்றிருக்கும் நாயகியை தாங்கி நிற்கின்றன. உயரத்தில் உள்ள காமாட்சியின் சந்நதியை அடைய பதினெட்டு திருப்படிகள் உள்ளன. இத்தலத்தில் அருளும் ராஜதுர்க்கை ‘சூலினி’ எனப் போற்றப்படுகிறாள். செவ்வாய் தோஷம் போக்குபவள். ஒவ்வொரு தை மாதமும் சண்டிஹோமம் கொண்டருளுகிறாள் சூலினி. தர்மபுரி கோட்டை கோயில் எனப் புகழ் பெற்ற இத்தலம் தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.தொகுப்பு: கிருஷ்ணா, ந.பரணிகுமார்…
இல்லறம் இனிதே அமைய கல்யாண காமாட்சி அருள்வாள்
previous post