ராசிபுரம், ஜூன் 24: நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், வெண்ணந்தூர் வட்டார வளமையத்தில், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்க நிலை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது. இப்பயிற்சினை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னறித் தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்களை மேம்படுத்துதல், கற்றல் விளைவுகள், தனி, இணை, குழு செயல்பாடுகளை ஊக்குவித்தல், அடைவுத்திறன் அட்டவணை பயன்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில், வெண்ணந்தூர் ஒன்றியத்தை சேர்ந்த 14 தன்னார்வலர்கள், ராசிபுரம் ஒன்றியத்தில் 10 தன்னார்வலர்கள் என மொத்தம் 24 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைச்செல்வி, கவிதா, ஜெகதீஸ் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெண்ணந்தூர் வட்டார வளமையம் செய்திருந்தது.