*பள்ளி நிர்வாகத்தை பாராட்டிய அதிகாரிகள்*பிற மையங்களிலும் பின்பற்ற அறிவுறுத்தல்ராமநாதபுரம் : இல்லம் தேடிக்கல்வி திட்ட கற்பித்தல் மையங்களில் மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் புதிய யுக்கதியை செயல்படுத்தி வரும் ஆரம்பப்பள்ளி நிர்வாகத்தை கல்வி அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.கொரோனா பேரிடர் கால பொது முடக்கத்தால் உருவான பள்ளி மாணவ, மாணவியரின் கற்றல் இடைவெளியை ஈடுசெய்ய இல்லம் தேடிக்கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது.்இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 அக்.27ல் தொடங்கி வைத்தார். இத்திட்டம் முதற்கட்டமாக 8 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது. பின் திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 ஜன.3ம் தேதி இல்லம் தேடிக்கல்வி திட்டம் தொடங்கப்பட்டது.ராமநாதபுரம் வட்டாரத்தில் 307 மையங்களில் 5,237 மாணவ, மாணவியர், மண்டபம் வட்டாரத்தில் 696 மையங்களில் 12 ஆயிரத்து 23 பேர், திருப்புல்லாணி வட்டாரத்தில் 299 மையங்களில் 5,833 பேர், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 219 மையங்களில் 4,594 பேர், திருவாடானை வட்டாரத்தில் 329 மையங்களில் 6,481 பேர், பரமக்குடி வட்டாரத்தில் 371 மையங்களில் 6,127 பேர், போகலூர் வட்டாரத்தில் 134 மையங்களில் 2,409 பேர், நயினார்கோவில் வட்டாரத்தில் 154 மையங்களில் 2,731 பேர், முதுகுளத்தூர் வட்டாரத்தில் 293 மையங்களில் 5,268 பேர், கமுதி வட்டாரத்தில் 304 மையங்களில் 5,792 பேர், கடலாடி வட்டாரத்தில் 586 மையங்களில் 10 ஆயிரத்து 17 பேர் என 11 வட்டாரங்களில் 3,692 மையங்களில் 66 ஆயிரத்து 512 மாணவ, மாணவியருக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் மாலை நேரக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்நிலையில், மண்டபம் ஒன்றியம் ஓம் சக்தி நகர் ஆரம்பப் பள்ளிக்கு உட்பட்ட எல்லைக்குள் நான்கு இல்லம் தேடிக்கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திட்டம் தொடங்கிய கால கட்டத்தில் தன்னார்வலர்களின் வீடுகளில் மையங்களில் செயல்பட்டன. இதனால் அங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் துவங்கியது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், பள்ளி மேலாண் குழுவினரின் உதவியுடன் பள்ளி நேரத்திற்கு பின், பள்ளி வளாகத்தில் 4 மையங்களும் செயல்பட ஒப்புதல் அளித்தார்.மேலும் மாலை நேரக்கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடும் மாணவ, மாணவியரின் நலன் கருதி கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டாணி, தட்டைப்பயறு, நிலக்கடலை, சோளம், மரவள்ளி, சக்கரை வள்ளி கிழங்கு என சிற்றுண்டிகளை தனது சொந்த செலவில் கடந்த 2 மாதங்களாக வழங்கி வருகிறார். மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை காட்டி வரும் ராபர்ட் ஜெயராஜுன் இந்த அர்ப்பணிப்பிற்கு குழந்தைகளின் பெற்றோரும் முன்வந்து தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன்படி தங்கள் குழந்தைகளின் பிறந்த நாளில் பலரும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி சிறப்பிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் மாணவர்களின் வருகை அதிகரித்து கல்வித்தரம் உயர்ந்து, வீட்டுப் பாடங்களை பள்ளியிலேயே முடித்து செல்கின்றனர். இவற்றில் பணியாற்றும் தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிகளை தொடர்கின்றனர்.இதன்படி இந்த பள்ளியில் உள்ள நான்கு மையங்களில் 106 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மண்டபம் ஒன்றியத்தில் செயல்படும் 696 மையங்களில் முன்மாதிரியாக செயல்படும் ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், ஆசிரியை கிருஷ்ணவேணி, தன்னார்வலர்கள் லட்சுமி, காயத்ரி, அழகேஸ்வரி, பிரியா, பள்ளி மேலாண் குழு தலைவர் ஐஸ்வர்யா ராய், துணைத்தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை மண்டபம் வட்டாரக் கல்வி அலுவலர் சூசை, ராமநாதபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் ராமநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோன், மண்டபம் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ததேயு ராஜ், திருப்புல்லாணி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் முருகவேல் ஆகியோர் பாராட்டினர்.இப்பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ள புதிய யுக்தியை பின்பற்றி மாவட்டத்தில் 11 வட்டாரங்களிலும் உள்ள இல்லம் தேடிக்கல்வி மையங்களில் மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க ஆசிரியர்கள், பள்ளி மேலாண் குழுவினர் மற்றும் பெற்றோர் முன்வர வேண்டும் என கல்வி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன்படி ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தங்களால் இயன்றதை பலரும் செய்யும் நிலையில் அரசின் இத்திட்டத்தை மக்கள் முனைப்பு இயக்கமாக செயல்படுத்தி 100 சதவீத வெற்றி இலக்கை அடையலாம் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது….