ஈரோடு,ஜூன்24: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக எழுச்சி பேரவை நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :பெருந்துறை அடுத்த அட்டவணைப்பிடாரியூரில், கடந்த 1998ம் ஆண்டு, ஆதிதிராவிட மக்களுக்கு 103 மனையிடங்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஆனால் அவர்கள் குடியேறததால், கடந்த 2020ஆம் ஆண்டு, 103 வீட்டுமனை பட்டாகளும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், அவர்கள் வேறு இடத்தில் இலவச வீட்டுமனைகள் பெற்று வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிடாரியூரில் இலவச வீட்டுமனை ரத்து செய்யப்பட்டவர்களில், ஒரு சிலருக்கு மீண்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு இல்லாத காரணத்தினாலும், ஆதிதிராவிட நலத்துறையில் கணினி முறையில் ஆவணப்பதிவு இல்லாததாலும், இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கே மீண்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா மீண்டும் பெற்றவர்களுக்கு ரத்து செய்து விட்டு, நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக எழுச்சி பேரவை தெரிவித்துள்ளது.