கள்ளக்குறிச்சி,நவ. 17: இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி மணமக்கள் திருமண கோலத்தில் வந்து ஆட்சியரிடம் மனு வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா நல்லாத்தார் கிராமத்தை சேர்ந்த மணமகன் விக்னேஷ்(22) மணமகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் நான் பிறந்தநாள் முதல் தாய் தந்தை ஆதரவின்றி நல்லாத்தூர் கிராமத்தில் எனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தேன். இன்று (நேற்று) நாள் வரைக்கும் எனக்கு வீட்டுமனையோ, நிலமோ சொந்த வீடோ கிடையாது. நான் முறைப்படி பெரியோர்களால் நிச்சியக்கப்பட்டு சின்னசேலத்தை சேர்ந்த அருண்குமார் மகள் அபர்னா(20) என்பவரை இன்று (நேற்று) நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டேன். எனது மனைவியின் தந்தையும் இறந்துவிட்டார். அவருக்கும் சொந்த வீடோ, நிலமோ இல்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் செய்துகொண்ட மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் மணகோலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.