கிருஷ்ணகிரி, செப்.13: இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலம், பிலிகுண்டு கிராமத்தில் 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி துவங்கியது. தளி ஒன்றியம், தொட்டமஞ்சி பஞ்சாயத்து பிலிகுண்டு கிராமத்தில் கே.ஆர்.பி., அணை இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான மாவட்ட வள மையம் இணைந்து, 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது. விழாவுக்கு அருள்ஜோதி வரவேற்றார். தர்மபுரி மறை மாவட்ட பொருளாளர் சூசைராஜ் பயிற்சியை துவக்கி வைத்தார். தர்மபுரி மறை மாவட்ட சமூக சேவை நிறுவன இயக்குனர் மரியப்பன் பேசினார். இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் ஜெகநாத் பேசுகையில், ‘மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை மூலம், கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது. பிலிகுண்டு போன்ற போக்குவரத்து வசதியற்ற வனப்பகுதியை சார்ந்த கிராமத்தில் உள்ள பெண்களுக்கு, இலவச தையல் பயிற்சி வழங்குவதன் மூலம், தங்களுடைய சுய வருவாயை பெருக்கிக்கொள்ள முடியும்,’ என்றார். மாவட்ட வளமைய அலுவலர் நிக்கோலா பிரகாஷ் நன்றி கூறினார். இதில் 35 பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.