ராமேஸ்வரம், ஆக. 5: ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் அருகில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட தலைவர் பிரின்சோ ரேமண்ட், தலைமை வகித்தார். மாநில மகளிரணி செயலாளர் ஜான்சி முன்னிலை வகித்தார்.
ஆர்பாட்டத்தில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் பிரச்னையின்றி மீன்பிடிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மீனவர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீன்பிடி வலையை உடலில் போர்த்திக்கொண்டு பங்கேற்றனர். பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் வேலாயுதம், மாநில இளைஞர் அணி செயலாளர் பிரதீப் உட்பட பலர் பங்கேற்றனர்.