வேதாரண்யம்,ஆக.29: வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 9 படகுகளை சென்ற 22 மீனவர்களை தாக்கி ரூ.10லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலை மற்றும் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இத்தாக்குதலில் 8 மீனவர்கள் காயம் அடைந்து வேதாரண்யம், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நமது தமிழக எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குவதும் பொருட்களை கொள்ளையடிப்பதும் நடந்து வருகிறது. எல்லை பகுதியில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை முகாம் வேதாரண்யம் பகுதியில் அமைத்து நாள்தோறும் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். தொடர் தாக்குதலால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டிற்கு அரசு உடன் நிவராணம் வழங்க வேண்டும். இந்திய எல்லையையொட்டி கடல் பகுதிகளில் கைவரிசை காட்டும் கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019ம் ஆண்டு பார்லிமெண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். எனவே அந்த சட்டத்தின்படி இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்க மீனவர்கள் மீதுதொடர் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடலில் கறுப்பு கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்தபடும் என தெரிவித்தார்.