புதுக்கோட்டை, ஜூன் 2: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தோப்புக்கொல்லை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த குலேந்திரன் மனைவி கே. பவானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் சசிகரன் (26), பெயிண்டிங் தொழிலுக்காக சென்னையில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.
கடந்த ஏப்ரல் 25ம் தேதி சென்னையில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு உறவினர்களுடன் சென்றிருந்தார். அதன்பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து மே 1ம் தேதியே சென்னையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது, 38 நாட்கள் நிறைவடைந்தும் சசிகரன் குறித்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, எனது மகனைக் கண்டுபிடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.