Saturday, June 3, 2023
Home » இலக்கிய மணம் கமழும் பூக்கள்

இலக்கிய மணம் கமழும் பூக்கள்

by kannappan
Published: Last Updated on

குறளின் குரல்: 141தமிழன்னையை ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பா மலர்களால் அர்ச்சித்திருக்கும் திருவள்ளுவர், திருக்குறளில் தம் கருத்துகளைச் சொல்லப் பயன்படுத்தியிருப்பது அனிச்சம், குவளை, தாமரை என்ற மூன்றே மூன்று மலர்களைத்தான். அவற்றில் தாமரையை இரண்டு குறட்பாக்களில் பயன்படுத்துகிறார்.‘மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்தாள் உளாள் தாமரையினாள்!’(குறள் எண்: 617)சோம்பல்கொண்டு உழைக்காமல் இருப்பவனிடம் மூதேவி தங்குவாள். சோம்பலின்றித் தொடர்ந்து உழைப்பவன் முயற்சியில் திருமகள் தங்குவாள்.‘தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.’(குறள் எண்: 1103)தாமரைக் கண்ணனுடைய உலகம் தாம் விரும்பும் காதலியின் மென்மையான தோள்களில் துயிலும் துயில்போல் இனிமையுடையதா என்ன? சொர்க்கத்தை விடவும் காதலியின் தோளில் துயிலும் சுகமே சுகம் எனக் காதலியைப் புகழ்கிறான் வள்ளுவர் காட்டும் தலைவன்.திருக்குறளுக்கும் தாமரை மலருக்கும் ஒரு தொடர்புண்டு என்கிறது ஒரு செவிவழிக் கதை. திருக்குறளின் இரண்டுவரிக் குறள் யாப்பை முதலில் சங்கப் புலவர்கள் ஏற்கவில்லையாம். அவ்வைப் பாட்டி, ‘நீங்கள் என்ன அங்கீகரிப்பது? மதுரைக் கடவுள் சொக்கநாதர் அங்கீகரிப்பார் என்பதில் எனக்கு ஐயமில்லை!’ என்றாள். சொக்கநாதர் அங்கீகரித்தால் தாங்களும் திருக்குறளை ஏற்பதாக உறுதி கூறினார்கள் புலவர்கள். சங்கப்புலவர்களோடும் திருவள்ளு வரோடும் திருக்குறள் சுவடியோடும் பொற்றாமரைக் குளக்கரைக்குச் சென்றாள் அவ்வை. ‘இந்தத் திருக்குறள் சுவடியைச் சொக்கநாதர் அங்கீகரிக்கட்டும்’ என வேண்டி அதைக் குளத்தில் இட்டாள்.மறுகணம் குளத்து நீர் பொங்கி அதிலிருந்து ஒரு பொற்றாமரை பூத்தது. அந்தப் பொன்னால் ஆகிய தாமரையின் நடுப்பகுதியான பொகுட்டின் மேல் திருக்குறள் சுவடி சேதமில்லாமல் வீற்றிருந்தது! ‘திருக்குறளை நாம் அங்கீகரித்தோம்!’ என அசரீரி ஒலித்தது. வியந்த புலவர்கள் வள்ளுவரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள் என்கிறது கர்ண பரம்பரைக் கதை. தாமரையை முன்வைத்து வள்ளுவர் மட்டுமா சிந்திக்கிறார்? எத்தனையோ புராணங்களும் இலக்கியங்களும் தாமரையை முன்வைத்து அழகிய அரிய செய்திகளைப் பேசுகின்றன.மண்ணுலகத்தில் மட்டுமல்லாமல் விண்ணுலகத்திலும் தாமரைக்குச் சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. செந்தாமரையில் அமர்ந்திருக்கிறாள் லட்சுமி. வெண்தாமரையில் வீற்றிருக்கிறாள் சரஸ்வதி.விண்ணுலகத் தேவியரின் திருக்கரத்தில் தாமரை மலர் இருப்பதைப் பார்க்கிறோம். இடக்கரத்தில் தாமரையைத் தாங்கி வலக்கரத்தால் ஆசி வழங்கும் பெண் தெய்வ வடிவங்களைப் பல கோயில்களில் காணலாம். எத்தனையோ வண்ண வண்ண மலர்களால் நாம் அம்பிகையை அர்ச்சித்தாலும் அவள் கையில் விரும்பி வைத்துக் கொண்டிருப்பது தாமரைமலரை மட்டும்தான். தாமரை அப்படியொரு தெய்வீகத் தன்மையைப் பெற்றுவிடுகிறது. பத்மம், கமலம், முண்டகம், பங்கஜம், முளரி, புண்டரீகம், அரவிந்தம், அம்புஜம், சரோஜம் என்பன போன்று தாமரைக்குப் பல பெயர்கள் உண்டு. பத்மா, கமலா, பங்கஜம், அம்புஜம், சரோஜா என்ற பெண் பெயர்களெல்லாம் தாமரையையொட்டிப் பிறந்தவையே.இறைவனின் திருவடிகள் பாத கமலங்கள் என்றே போற்றப்படுகின்றன. ‘ராமனுடைய பாத – கமலம், ராவணனுடைய பாதக – மலத்தைப் போக்கிற்று’ எனச் சிலேடை நயத்தோடு பேசுவார், வாரியார் சுவாமிகள்.இறைவனின் திருவடிகளைத் தாமரை மலரோடு ஒப்பிடும் மரபு, சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டது. குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தில், ‘தாமரை புரையும் காமர் சேவடி’ என முருகனின் திருவடிகளைத் தாமரையோடு ஒப்பிடுகிறார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.  இந்தியக் கட்டடக் கலையில் பழங்காலந் தொட்டே தாமரை உண்டு. தாமரை மலர்கள் செதுக்கப்பட்ட தூண்களுக்கும் விதானங்களுக்கும் தமிழக ஆலயங்களில் பஞ்சமே இல்லை. தேங்கிய குளத்து நீரில்தான் தாமரை விளையுமே அன்றி ஓடும் நீரில் விளையாது. சேற்று நீரில் விளைந்து நீருக்குமேல் அழகிய மலர்களைப் பூப்பது இதன் தன்மை. மோசமான குடும்பத்தில் நல்லவர்கள் பிறந்தால் சேற்றில் முளைத்த செந்தாமரை என அவர்களைப் புகழ்வதுண்டு.நாராயண பட்டதிரி குருவாயூரப்பன்மேல் எழுதிய நாராயணீயம், உலகில் முதன்முதலில் தோன்றிய ஆதித் தாமரையைப் பற்றிப் பேசுகிறது. பிரளயப் பெருவெள்ளத்தில் சயனத் திருக்கோலத்தில் இருந்த திருமால், பிரளயத்தில் மறைந்துபோய்த் தம்மிடம் சூட்சும வடிவில் ஒடுங்கியிருந்த உலகங்களின் மீது தமது கடாட்சத்தைச் செலுத்தினார்.அவரது தொப்புட் குழியிலிருந்து சூட்சுமமானதொரு மொக்கு உண்டாகி அதிலிருந்து தெய்வீகத் தாமரை மலர் ஒன்று மலர்ந்தெழுந்தது. தண்ணீர்ப் பரப்புக்குமேல் எழுந்த அந்தத் தாமரையின் பிரகாசம் பிரளயகால இருள் முழுவதையும் போக்கிவிட்டது.அந்தப் பூவில் ‘பத்ம ஜன்மா’ என்றழைக்கப்படும் பிரம்மதேவன் உதித்தார். தாம் யார் என்றறியாத அவர் நாலா திக்கிலும் தம்மைத் தோற்றுவித்தவர் யார் எனச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். எனவே, அவர் நான்கு முகங்களையும் எட்டு விழிகளையும் கொண்டவரானார். பின் தம்மைத் தோற்றுவித்தவர் யாரென அறிய வேண்டித் தாமரைத் தண்டைப் பிடித்துக்கொண்டு கீழிறங்கியும் திருமாலைக் காண இயலாதவர் ஆனார். மறுபடியும் மேலே வந்த அவர் தன் இருப்பிடமான தாமரை மேல் அமர்ந்து பல கோடி ஆண்டுகள் தவம் செய்தார்.இறுதியில் தமக்குள்ளேயே தம்மைத் தோற்றுவித்த திருமாலின் வடிவத்தைக் கண்டு கொண்டார். வெளியே தேடித்தேடி காணாத இறை சக்தியை உள்ளத்தில் தேடினால் கண்டு கொள்ளலாம் என்ற உண்மைக்கு அவர் செயலே விளக்கமாயிற்று. அன்னை செந்தாமரை மலர், நாகலிங்க மலர் இரண்டையும் வைத்து இறைவனை வழிபட்டால் வழிபடும் அன்பருக்குச் செல்வம் அருளப்படும் என்றும் இறைசக்தியைச் செந்தாமரை மலர்மூலம் வழிபட்டுச் செல்வத்தை அடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.மருதநிலம் சார்ந்து கம்பநாட்டாழ்வார் அழகிய கற்பனையை உருவாக்குகிறார். மருத நிலத்தில் மயில்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறதாம். தாமரைகள் ஒளிவிளக்குகளை ஏந்துகின்றன. மேகங்கள் மத்தளம் இசைக்கின்றன. குளத்தில் உள்ள நீரலைகள் திரைச்சீலைகள்போல் தோற்றம் தருகின்றன. வண்டுகள் பாடுகின்றன. இந்தக் காட்சியைக் குவளை கண்விழித்து நோக்குகிறது என எழுதுகிறார் கம்பர். என்ன அபாரமான கற்பனை! இதில் செக்கச்சிவந்த சுடர்போல் தென்படும் தாமரை மொக்குகளை விளக்கிற்கு உவமையாக்கியுள்ள நயமே நயம்.‘தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கம் தாங்கக்கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை கண் விழித்து நோக்கத்தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ!’(கம்ப ராமாயணம்.)சுந்தர காண்டத்தில் ராமனையே நினைத்து வாடியிருக்கிறாள் சீதாதேவி. முடி சூடு என்றபோதும் கானகம் போ என்றபோதும் வாடாமல் சித்திரத் தாமரைபோல் இருந்த ராமனின் திருமுகத்தை சீதை நினைப்பதாக எழுதுகிறார் கம்பர்.‘மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும்இத்திருத்துறந்து ஏகென்ற போதினும்சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரைஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்!’ (கம்பராமாயணம்)புகழேந்திப் புலவரின் ‘நளவெண்பா’, தாமரையை மையப்படுத்தி ஓர் அழகிய கற்பனையைப் பேசுகிறது. தமயந்தி சுயம்வர மண்டபத்தில் நடந்து வருகிறாள். அவள் அழகைக் கண்டு மன்னர்களுடைய விழிகளாகிய தாமரைகள் மலர்ந்திருக்கின்றன. அந்த விழித் தாமரைகள் பூத்த மண்டபத்தில் ஓர் அன்னம் நடப்பதுபோல் தமயந்தி நடந்து வருவதாக எழுதுகிறார் கவிஞர்.பொய்கையைப் பற்றிச் சொல்லும்போது தாமரை பூத்த பொய்கை எனப் பொதுவாகச் சொல்லாமல், செந்தாமரைப் பூக்கள் பூத்த பொய்கை என்கிறார். அதில் ஒரு நயம் உண்டு. மன்னர்களின் விழிகளைச் செந்தாமரைக்கு ஒப்பிடக் காரணம் அந்த விழிகள் தமயந்தி மேல் கொண்டிருந்த காமத்தால் சிவப்பேறிக் காணப்பட்டன என்பதால்தான்!‘மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தேபொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் – மின்னிறத்துச் செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப் பொய்கைவாய்ப் போவதே போன்று’.(நளவெண்பா) இடைக்காலச் செய்யுள் நூலான விவேக சிந்தாமணி, தாமரையை முன்வைத்துப் பல உயரிய கருத்துகளைப் பேசுகிறது. தாமரை இருக்கும் அதே தண்ணீரில் பிறந்து வாழ்வதுதான் தவளை. ஆனால் தவளைக்குத் தாமரையில் இருக்கும் தேனின் பெருமை தெரிவதில்லை. அது புழு பூச்சிகளை உணவாகக் கொள்கிறதே அன்றித் தேனை உண்ணுவதில்லை.ஆனால் அந்தக் குளத்திற்குச் சம்பந்தமில்லாது எங்கோ தொலைவிலிருந்து பறந்து வருகிறது வண்டு. அது தாமரையில் உள்ள தேனின் பெருமையை உணர்ந்து அதைச் சுவைக்கிறது. அதுபோல் மிகவும் பழகியிருந்தாலும் புல்லர்கள் நல்லவர்களை அறிந்துகொள்வதில்லை. எங்கிருந்தோ வரும் கற்றவர்கள்தான் அந்த நல்லவரின் பெருமையுணர்ந்து அவருடன் நட்பு பாராட்டுவார்கள்.‘தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகராமண்டூகம் வண்டோ கானத் திடையிருந்து வந்து கமல மதுவுண்ணும் பண்டேபழகி யிருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைகண்டே களித்தங் குறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே!’.(விவேக சிந்தாமணி)யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் நலமாக இருக்கலாம், அது இல்லாது நிலை தடுமாறினால் நெருங்கிய உறவுகளாலேயே துன்பம் நேரும் என்கிறது விவேக சிந்தாமணியின் மற்றொரு பாடல்.தாமரை மலருக்குத் தந்தை சூரியன். தாய் தண்ணீர். தாயான தண்ணீரால் வளம் பெற்று, தந்தையான சூரியனைக் கண்டதும் முகம் மலர்கிறது தாமரை. இருக்கும் இடத்தில் இருந்தால்தான் இது நடக்கும்.தாமரையைக் கொய்து தண்ணீரில் போட்டால் அதன் தாயான தண்ணீராலேயே அது அழுகி விடும். அதைக் கொய்து தரையில் போட்டால் தந்தையான சூரியனே அதை வாடச் செய்வான். எனவே, அவரவர் தங்கள் நிலைமையில் பொருந்தி இருத்தல் அவசியம். நிலை மாறினால் நெருங்கியவர்களே பகைவர்களாக வாய்ப்புண்டு.  ‘சங்குவெண் தாமரைக்குத் தந்தைதாய் இரவி தண்ணீர் அங்கதைக் கொய்துவிட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும் துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்கு வாரே.’(விவேக சிந்தாமணி)திருச்சி தியாகராஜன் எழுதிய புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடல் ஒன்று உண்டு.‘தாமரை பூத்த தடாகமடி – செந்தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடிபாமழையால் வற்றாப் பொய்கையடி- தமிழ்ப்பைங்கிளிகள் சுற்றிப் பாடுதடி’இந்தப் பாடல் தமிழ் மொழியை ஒரு தடாகமாக உருவகித்துத் தமிழ்ப் பற்றோடு எழுதப்பட்டுள்ளது. தமிழ்த் தடாகத்தில் பூத்த கவிதைத் தாமரைகளைப் போற்றுகிறார் கவிஞர்.தமிழ்த்திரைக் கவிஞர்கள் தாமரை மலரைப் பல பாடல்களில் கொண்டாடுகிறார்கள். ‘பணமா பாசமா’ திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் டி.எம். செளந்தரராஜன், பி.சுசீலா குரல்களில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல், ‘மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல’ என்ற பல்லவியோடு தொடங்குகிறது. அதன் ஒரு பகுதி தாமரைப் பூ பற்றியும் அதில் தேனருந்தும் வண்டு பற்றியும் சொல்லிப் பூடகமாகக் காதல் காட்சியை விவரிக்கிறது.‘தாமரைப் பூவினில் வண்டுவந்துதேனருந்த மலர் மூடிக்கொள்ளஉள்ளிருந்தே வண்டு ஆடுதல்போல் என்உள்ளத்தில் நீயின்று ஆடுகின்றாய்!’தாமரை மலர் பகலில் பூக்கும். ஆனால் பெண் இரவில் பூக்கும் தாமரை போன்றவள் எனப் பெண்ணைத் தாமரை மலரோடு ஒப்பிட்டு வாலி எழுதிய பாடல் ‘தங்கமகன்’ திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கிறது.‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ’…விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் டி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கும் இலக்கிய நயம் நிறைந்த கண்ணதாசன் பாடலொன்று, ‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ‘பவழக் கொடியிலே முத்துக்கள் சேர்த்தால்’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் காதலியின் காலடித் தாமரை நாலடி நடந்தால் அதைக் கண்டு காதலன் இதயமே புண்ணாகிவிடும் என்கிறார் கவிஞர்.‘பூமகள் மெல்ல வாய்மொழி சொல்லசொல்லிய வார்த்தை பண்ணாகும் – அவள்காலடித் தாமரை நாலடி நடந்தால்காதலன் இதயம் புண்ணாகும்…’‘தாமரை நெஞ்சம், இதயக் கமலம்’ என்றெல்லாம், தாமரைமலரைத் தலைப்பிலேயே தாங்கித் திரைப்படங்கள் வந்துள்ளன. தமிழ்த் திரைப்படங்களில் தாமரை மலர்களுக்குப் பஞ்சமே இல்லை.மலர்களிலேயே மிக அழகிய மலரான தாமரைதான் நமது தேசிய மலரும் கூட.தாமரை மருத்துவக் குணங்கள் உடையது. ஆயுர்வேதத்தில் மூளை வளர்ச்சி, பார்வைத் தெளிவு போன்றவற்றிற்காகத் தயார் செய்யப்படும் மருந்துகளில் தாமரை இதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன.திருக்குறளுக்கும் மருத்துவக்குணம் உண்டு! சமுதாயத்திலும் தனி மனிதனிடத்திலும் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து திருக்குறள்தான். மது விலக்கு, மதநல்லிணக்கம் போன்ற உயரிய லட்சியங்களை அடைவதற்குக் கைகொடுக்கும் மருந்து  திருக்குறளைப்போல வேறொன்றில்லை.(குறள்  உரைக்கும்)திருப்பூர்கிருஷ்ணன்…

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi