உலகோர் வியக்க உயர்ந்து நிற்கும் நமது சமய மரபில், தனக்கு மேல் ஒரு தலைவனே இல்லாத் தலைவனாய்ப் போற்றப்பெறும் சிறப்பினை உடைய கடவுள் விநாயகர் ஆவார். இவ்விநாயகர் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தினையொட்டியே தமிழ்நிலத்தில் தோன்றியது என்பாரும் உண்டு. பல்லவ மன்னர்களுள் மிகப் புகழ்பெற்றவனும் மாமல்லபுரக் கடற்கரைக் கோயில்களை நிருமாணித்தவனுமாகிய முதலாம் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தளபதியாகச் சிறந்திருந்த பரஞ்சோதி (சிறுத்தொண்டர்) சாளுக்கிய நாட்டில் படையெடுத்து வாதாபியைத் தீக்கிரையாக்கியபொழுது, அங்கிருந்துகொண்டுவரப்பெற்றவரே விநாயகர் என்றொரு கருத்து நிலவுகிறது. ஆனால் தமிழில் சங்க காலத்துத் தோற்றம் பெற்ற இலக்கியங்களுள் ஒரு பிரிவாகிய பத்துப்பாட்டினுள் முதலாய் வைத்துப் போற்றப்பெறும் திருமுருகாற்றுப்படையின் பின் அமைந்துள்ள வெண்பாக்கள் ஒன்றனுள் விநாயகர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இந்நூல் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது.இதன் இறுதியில் அமைந்துள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பா, முருகனே செந்தில் முதல்வனே மாயோன்மருகனே ஈசன்மகனே – ஒருகை முகன்தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்நம்பியே கைதொழுவேன் நான் என்பதாகும். இதில் “ஒரு கை முகன் தம்பியே” என்றொரு தொடர் காணப்படுகிறது. இத்தொடர் விநாயகரையே குறித்து நிற்கிறது. எனினும் இவ் வெண்பாக்கள் பிற்காலத்துப் பாடிச் சேர்க்கப்பெற்றவை என்பாரும் உளர். ஆயினும் யானை தமிழர்களால் போற்றி வளர்க்கப்பெற்ற சிறப்பினை உடையதே ஆகும். தமிழ் இலக்கியங்களில் யானை பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. யானை, வேழம், களிறு, பிளிறு, பிடி, கலபம், மாதங்கம், கைமா, உம்பல், வாரணம், அத்தி, அத்தினி, அல்லியன், அரசுவா, ஆம்பல், இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு, கரி, அஞ்சனம், நாகம், கதநாகம், கறையடி, பெருமா, ஓங்கல், பொங்கடி, நால்வாய், புகர் முகம், கைம்மலை, வழுவை, மதோற்கடம், கடகம், எறும்பி, கயம், சிந்துரம், வயமா, மதகயம், மதாவளம், கும்பி, மருண்மா, தூங்கல், அதவை, வடவை, கரிணி என்பன போன்றன அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழ் மூதாட்டி ஔவையும் சங்கத்தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு விநாயகரையே வேண்டி நின்றார். பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்சங்கத் தமிழ் மூன்றும் தா! என்ற ஔவையின் பாடல் சங்கத்தமிழையும் விநாயகரையும் தொடர்புபடுத்தி நிற்கும். பிற்காலத்து அப்பரும் சம்பந்தரும் விநாயகர் பற்றிய குறிப்புகளைத் திருமுறைகளில் தருகின்றனர். பிடியத னுருவுமை கொளமிகு கரியதுவடிகொடு தனதடி வழிபடு மவரிடர்கடிகண பதிவர வருளினன் மிகுகொடைவடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. கொடையே தமக்கு அழகைத் தரும் என நினைக்கும் வள்ளற் பெருமக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் உறைந்த இறைவன், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ள, தான் ஆண் யானையின் வடிவு கொண்டுத் தன் திருவடியை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் களைவதற்காகத் கணபதியைத் தோற்றுவித்தருளினான் என்கிறார் ஞானசம்பந்தர். திருநாவுக்கரசர், பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளேகலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. என வரும் பாடலில் பற்பல விருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத் துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும். இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியார்கள் நாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை என்று குறிப்பிட்டுரைக்கின்றார்.விநாயகரின் வடிவத்தினைச் சிவஞான சித்தியார் தெளிவாக விரித்துரைக்கும். தன் சடைமுடியில் கங்கையினைத் தாங்கிய சிவபெருமான் அருளிய மூத்த பிள்ளையார் ஒற்றைக் கொம்பினை உடையவர். இரண்டு செவிகளையும் மூன்று மதங்களையும் தொங்குகின்ற திருவாயினையும் ஐந்து கரங்களையும் உடைய ஒப்பற்ற யானைமுகப் பெருமான் ஆவார். அன்புள்ளத்தோடு தன்னை வழிபடுவோரின் சிந்தைத் திருக்கினை நீக்குவார். திருமால், பிரம்மன் ஆகியோரின் பதங்களும் பொருட்டாகாத வண்ணம் எல்லாவற்றிற்கும் மேலான வீட்டின்பத்தினை வழங்குவார் எனக் குறிக்கும். இதனை, ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்நால்வாய் ஐங்கரத்தன் ஆறு தருகோட்டம் பிறைஇதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதேஇரவுபகல் உணர்வோர் சிந்தைத்திருகுஓட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன்றோ என்னச் செய்யும் தேவே என்ற பாடலால் அறியலாம். விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்ட நாயகராய்ப் புவியில் அருட் பாலிப்பவர். அக்கரங்களில் ஒன்றினைத் தமக்காகவும் பிறிதொன்றினைத் தேவர்களுக்காகவும் மற்றொன்றினை தாய் தந்தையர்க்காகவும் மேலும் இரண்டு கரங்களை நம்போல் மானுடர்க்கு அருள் புரிவதற்காகவும் கொண்டு விளங்குகிறார். இதனை, பண்ணிய மேந்தும் கரந்தனக் காக்கிப்பானிலா மருப்பமர் திருக்கைவிண்ணவர்க் காக்கி யாதெமனக் கலசவியன்கரந் தந்தை தாய்க் காக்கிக்கண்ணிலா ணவவெங் கரிபணித் தடக்கிக்கரிசி னேற்கிருபையு மாக்குமண்ணலைத் தணிகை வரைவளராபக்காயனை யகந்தரீஇக் களிப்பாம் எனத் தணிகைபுராணம் குறித்து நிற்கும். விநாயகரின் நாபிக் கமலமானது பிரம்மனையும் முகம் திருமாலையும் முக்கண்கள் சிவபெருமானையும் இடப்பாகம் சக்தியையும் வலப்பாகம் சூரிய சந்திரர்களையும் உணர்த்து நிற்கின்றன. விநாயகரின் ஐந்து கரங்களில் உள்ள பொருட்களை திருநறையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை பின்வருமாறு குறிப்பிடும். விநாயகரின் இடதுபுறக் கீழ்க்கையில் மாங்கனி, வலதுபுறக் கீழ்க்கையில் தந்தம், தும்பிக்கை அண்டம், அதாவது ஆகாயத்தைத் தழுவுகின்றது என்பது பொருள். இடப்புற மேல்கை பாசம், வலப்புற மேற்கை அங்குசம். இதனை உணர்த்தும் பாடல், வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்துபொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து – கையகத்தோர்மாங்கனிதன் கொம்பண்டம் பாமழுமல்குவித்தான்ஆங்கனிநம் சிந்தையமர் வான் என்பதாம். திக்கெலாம்வென்று வெற்றிக் கொடி நாட்டலாம் கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்; விடத்தையும் நோயையும் வெம்பகை அதனையும் துச்சமென்று எண்ணித் துயரிலாது இங்கு நித்தமும் வாழ்ந்து நிலைபெற்றுச் சிறக்கலாம். அச்சந் தீரும்; அமுதம் விளையும்; வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்; அமரத் தன்மையும் எய்தி இன்புறலாம். காத்தருள் புரிக, கற்பக விநாயகா,காத்தருள் புரிக, கடவுளே, உலகெலாம்கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே,அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்எங்குல தேவா, போற்றி!சங்கரன் மகனே தாளிணை போற்றி! – எனத் தாயாய் நமக்கு வந்திருந்து அருளி மாயப்பிறவியின் மயக்கம் கெடுத்து, சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதமாய் நின்ற கற்பகக் களிற்றை, போற்றி வணங்கிப் புகழுடன் செல்வமும், நல் அறிவும். ஆண்மையும் இத்தரணி மீதினில் இனிதே பெற்று உயர்வு பெறுவோமாக!முனைவர் மா. சிதம்பரம்…