அரியலூர். ஜூன் 24: ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 26ம் தேதி கடைசிநாள் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை- ஆதிதிராவிடர் நல ஆணையர் செயல்முறைகள் கடிதத்தின்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர் நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் தற்காலிகமாக நிரப்ப கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
பூவாணிப்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், வேதியியல் -1. முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம்-1, வெத்தியார்வெட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், வேதியியல்-1, முதுகலை பட்டதாரி ஆசிரியர். வணிகவியல்-1, முதுகலை பட்டதாரி ஆசிரியர், விலங்கியல்-1, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம்-1, பட்டதாரி ஆசிரியர், சமூக அறிவியல்-1, விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம்-1, பட்டதாரி ஆசிரியர், கணிதம்-1, ஆகமொத்தம் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் – 5, பட்டதாரி ஆசிரியர்கள் – 4 என 9
தகுதிகள்: தற்காலிகமாக முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதி/வயது தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்படும். பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப்பப்படும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்கள் மட்டுமே இருக்கவேண்டும். தற்காலிகமாக நிரப்பப்படும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான முன்னுரிமைகள்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்படி முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படுவார்கள், பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது, தற்காலிகமாக நிரப்பப்படும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அறை எண்.35-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூன் 26ம் தேதி மாலை 5.45-க்குள் ஒப்படைக்கவேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.