அறந்தாங்கி,நவ.20: இறால் பண்ணைக்கு மின் இணைப்பு வழங்க கோரி மீமிசலில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே வெளிவயல் கிழக்குக் கடற்கரை சாலைக்கு அருகே தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இறால் பண்ணைகளுக்கு அருகே உள்ள பட்டா இல்லாத இடத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டா இடத்தில் இருந்து இறால் பண்ணைகளுக்கு வழங்கப்படும் மின்சார இணைப்புகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் துண்டித்து உள்ளனர்.மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இறால் பண்ணையில் இறால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும், தற்போது பண்ணைகளில் இறால் குஞ்சுகள் விடப்பட்டு அதனை விற்பணை செய்யும் நிலையில் இருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இறால் விற்பணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இறால் பண்ணை உரிமையாளர்கள் ராமநாதபுரம் நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீமிசல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மீமிசல் கிழக்கு கடல்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.