விழுப்புரம், ஜூலை 28: விழுப்புரம் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகேயுள்ள டட் நகர் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்பவரின் மாமனார் மாணிக்கம் மற்றும் கணவரின் சகோதரர் சவரிமுத்து ஆகிய இருவரும் 35 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால் அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக அத்தியூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து இருந்தார்.
அதற்கு அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலராக உள்ள சங்கீதா, ரூ.1000 லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து அன்னம்மாள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். ரூ.1000 லஞ்ச பணத்தை அரியலூர் திருக்கையிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓ சங்கீதாவிடம் அன்னம்மாள் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சங்கீதாவை கையும், களவுமாக பிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட சங்கீதா மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.