வலங்கைமான், ஆக. 24: திருவாரூர் அருகே இறந்த பெண் குரங்கை விட்டு பிரியாமல் சுற்றி வந்து ஆண் குரங்கு கதறி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் பகுதியில் அபிஷேக் என்பவரது தோட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு ஜோடி குரங்குகள் சுற்றி திரிந்தது. இந்நிலையில் நேற்று காலை எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்த பெண் குரங்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து இணை குரங்கான ஆண் குரங்கு இறந்து போன பெண் குரங்கை தழுவி கண்ணீர் சிந்தியது.இறந்த பெண் குரங்கை அடக்கம் செய்ய முயன்ற போது ஆண் குரங்கு சுற்றி சுற்றி வந்து கதறியது. மிகுந்த போராட்டத்திற்கு இடையே இறந்த பெண் குரங்கு அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் ஆண் குரங்கு பல மணி நேரம் வாய் விட்டு கத்தியது. இந்த சம்பவம் பார்ப்போர் மனதை நெகிழ செய்தது.