நித்திரவிளை, அக் 18: அசாம் மாநிலம் கரும்பி அங்குலாம் என்னுமிடத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் (25). இவர் இரையுமன்துறை பகுதியில் கடலரிப்பை தடுக்க போடப்படும், கான்கிரீட்டாலான கோர்லாக் கட்டைகள் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கிரேன் மூலம் கான்கிரீட் கலவையை தூக்கி வரும் போது, அதன் கம்பி அறுந்து சிக்கந்தர் மீது விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிக்கந்தரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து சிக்கந்தர் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.