கோவை, செப்.1: தமிழக அரசின் உணவு வழங்கல் துறை சார்பில் காலை 7 மணி முதல் 8 மணி வரை ரேஷன் கடைகள் திறந்து வைக்க வேண்டும் என அறிவிப்பு வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இந்த அறிவிப்பின் படி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் துவரம்பருப்பு, பாமாயில் வழங்கும் பணி சற்று தொய்வு ஏற்பட்டது. விடுபட்ட கார்டுதார்களுக்கு இந்த மாதம் 5ம் தேதி வரை பருப்பு, பாமாயில் வழங்க உத்தரவிடப்பட்டது. மக்கள் விரைவாக பெற கூடுதல் நேரம் கடைகள் திறக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய அறிவிப்பினால் கடைகளில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘இந்த மாதம் 5ம் தேதி வரை பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்க முடியுமா? என தெரியவில்லை.
ஆனால், இந்த மாதம் இறுதி வரை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் கூடுதலாக பெற வழிவகை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் இரு மாத பொருட்களையும் பெற வழிவகை செய்யலாம். செப்டம்பர் 5ம் தேதி வரை ஆகஸ்ட் மாத ஒதுக்கீடு பெற்று, அதற்கு பிறகு நடப்பு மாத ஒதுக்கீடு பொருட்கள் பெறுவது நடைமுறையில் சரியாக இருக்காது. இதை உணவு வழங்கல் துறையினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.