சுரண்டை, பிப்.28: சுரண்டை அருகே சாம்பவர்வடகரை பொதுமக்கள் கடைகளை அடைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை கீழூர் பகுதியில் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நிலவி வரும் பிரச்னை தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எங்களிடம் ஊரிலிருந்து வரி வாங்கவில்லை எனக்கூறி புகார் கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் (புதன் கிழமை) கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாமல் வாக்குவாதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் சாம்பவர்வடகரை கீழூர் பகுதியில் மருந்தகங்கள் தவிர எந்த கடைகளும் திறக்கவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி கோயில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாம்பவர்வடகரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற தென்காசி டிஎஸ்பி தமிழ்இனியன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.