பந்தலூர்,மே26: பந்தலூர் அருகே போதிய தெருவிளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியது பொன்னூர் காலனி. நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பொன்னூர் காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது உள்ளது. இப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் வசதி இல்லாமல் இருளில் மூழ்கி வருகின்றது.மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர்,நடைபாதை போன்றவை முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருந்து வருகின்றது.
பொதுமக்கள் தொடர்ந்து பொன்னூர் காலனி பகுதியில் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே பொன்னூர் காலனி பகுதியில் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.