திருத்தணி, ஆக. 26: திருத்தணி அருகே, இருளர் காலனியில் தொடக்கப்பள்ளி திறக்க வேண்டி மார்க்சிஸ்ட் வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சி பகத்சிங் நகர் இருளர் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்மாநாட்டை வட்ட செயலாளர் அந்தோணி தொடங்கி வைத்து பேசினார். புதிய கிளை செயலாளராக கோபி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்ட குழு உறுப்பினர் அப்சல் அகமத் நிறைவுரையாற்றினார். பகத்சிங் நகர் இருளர் காலனிக்கு பகுதிநேர ரேஷன் கடை, விடுபட்ட 7 குடும்பங்களுக்கு பட்டா வழங்கவும், பகத்சிங் நகர் இருளர் காலனியைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க ஏதுவாக தொடக்க பள்ளி திறக்கவும், திருத்தணி முதல் வீரகநல்லூர், பகத்சிங் நகர் இருளர் காலனி வழியாக சோளிங்கர் மற்றும் பள்ளிப்பட்டு வரை அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.