கடத்தூர், ஜூன் 26: கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி கிராமத்தில், முத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சரண்(30). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 18ம் தேதி, லோன் தவணை பணம் பெறுதல் தொடர்பாக, அதே கிராமத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரிடம் பணம் பெறுவதில், வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பு மோதலாக மாறியது. இதையடுத்து சரண் அவரது கிராமத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் சில்லாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த, கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து காயமடைந்த சரண், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது குறித்த புகாரின் பேரில், சில்லாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த பரசுராமன்(30), சதீஷ்(32), விக்னேஷ்(27) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து, பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.