கோவை, ஆக. 26: கோவை இருதய நோய் நிபுணர் சங்கம் சார்பில் இளம் மருத்துவர்களுக்கான பயிற்சி மற்றும் இதய சிகிச்சை சவால்கள் குறித்த கருத்தரங்கம் நேற்று கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் இருதய நோய் துறை மூத்த நிபுணர்கள் கலந்து கொண்டு இளம் மருத்துவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக இருதய நோய் அறுவை சிகிச்சை துறையில் மேற்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும், அதனை எப்படி திறம்பட எதிர்கொள்வது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினர்.
திடீர் மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘இளம் தலைமுறையினர் தற்போது திடீர் மாரடைப்பு போன்ற இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சிறு வயதிலேயே மரணம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மது அருந்துவது, புகைப்பிடித்தல், அதிகப்படியான துரித உணவுகளை உட்கொள்வது, போதிய உடற்பயிற்சி இன்மை போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது.
எனவே இளம் தலைமுறையினர் மட்டுமல்லாது, வயது முதிர்ந்தவர்களும் தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். எனவே பொதுமக்களிடம் இருதய நோய் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது’’ என்றனர். இதில் இருதய நோய் சிகிச்சை துறையின் மூத்த நிபுணர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.