விராலிமலை, மே 19: விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலூர் பிரிவு சாலை அருகே வானதிராயன்பட்டியைச் சேர்ந்த ராமு(50), விராலூர் சோலைமலை (60) ஆகிய இரண்டு விவசாய தொழிலாளர்கள் இரு சக்கர வாகனத்தில் விராலிமலை வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது விராலிமலை -மதுரை தேசிய நெடுஞ்சாலை வானத்திராயன்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்திற்குப் பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி சொருகி நின்றது.
கார் சொருகிய வேகத்தில் இருவரும் சாலை அருகே தூக்கி வீசப்பட்டனர். இருவரும் காயங்களுடன் தப்பிய நிலையில் விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்தில் இருசக்கர வாகனத்திற்கு எந்தவித சேதாரம் ஏற்படவில்லை. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர்.