சங்கரன்கோவில், நவ. 22: சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்துமலை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் அமுதாராஜ். இவர் சங்கரன்கோவில் சப் ஜெயிலில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஊத்துமலையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பெரிய கோயிலான்குளம் விலக்கு அருகே சென்ற போது, பெரியகோயிலான்குளத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பிரேமா நெல்லை பிரதான சாலையில் உள்ள டீக்கடையில் டீ வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றார். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அமுதாராஜ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கும், பிரேமா நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.