வேலூர், ஆக.28: வேலூர் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் கட்டாயம் வாகன சோதனையில் ஈடுபட, ஏபிசி டீம் அமைத்து எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட அணைக்கட்டு ஆகிய சப்டிவிஷன்களில் உள்ள காவல்நிலைய பகுதிகளில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றசம்பவங்கள் அரங்கேறாமல் தடுக்கவும், இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களால் எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்னையும், விபத்துக்களும் ஏற்படாமல் இருக்க, மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் கட்டாயம் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். அதற்கு ஏபிசி டீம் அமைத்து செயல்பட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து எஸ்பி மதிவாணன் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் உள்ள போலீசார் இரவு 11 மணிக்கு மேல் கட்டாயம் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். வாகன ேசாதனை மேற்கொள்ளும் போலீசார் ஏ, பி, சி ஆகிய 3 டீம்கள் அமைத்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஏ டீம் வாகனங்கள் வருவதை கண்காணிக்கவும், பி டீம் வந்த வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும். சந்தேகப்படும்படியாக இருந்தால் சி டீம் மூலம் வாகனங்கள் பறிமுதல் செய்து, அந்த நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இதில் தேவையின்றி இரவு நேரங்களில் சுற்றும் வாலிபர்களாக இருந்தால் அவர்களது செல்போனில் இருந்து வீட்டிற்கு போன் செய்து, சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு பெற்றோர்களை மறுநாள் காலை வரவழைத்து அறிவுரை வழங்க வேண்டும்.
அதேசமயம், இரவு பணி முடித்துவிட்டு வருபவர்களிடம் ஐடி கார்டு வாங்கி சரிபார்த்துவிட்டு அனுப்பிவிட வேண்டும். போலீசார் சோதனை செய்யும் இடங்களில் வாகனங்கள் நின்று செல்லும் வகையில் பேரிகார்டுகள் அமைக்க வேண்டும். வாகனங்களை துரத்தி பிடிக்க கூடாது. இதில் சந்தேகப்படும்படியாக இருந்தால் சம்மந்தப்பட்ட நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அந்த நபர்களிடம் விசாரணை நடத்தி குற்றவாளிகளாக இருந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.