ராமேஸ்வரம், நவ.6: ராமேஸ்வரத்தில் இரவில் பெய்த மழையினால் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது. நகரில் 4 செமீ மழை பெய்துள்ளது. ராமேஸ்வரம் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் மழை பெய்தது. அதிகாலை இரண்டு மணி வரை பெய்த பலத்த மழையினால் சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் நகரில் சாலையோரங்களில் மற்றும் தெருக்களில் வீடுகளுக்கு முன்புறம் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் இருந்து வெளியேறிய சாக்கடை கழிவு நீரும் மழை நீருடன் சேர்ந்து சாலையில் ஓடியது.
கழிவு நீரும் சேர்ந்ததால் சாலையிலும், தெருக்களிலும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.மேலும் தெருக்களில் உள்ள நகராட்சி குடிநீர் குழாய்கள் பலவும் மேல் பகுதி உடைந்து தரைமட்டத்தில் இருப்பதால் சாலையில் ஓடும் கழிவுநீருடன் கலந்த மழைநீர் குழாய் வழியாக செல்கிறது. வீடுகளில் பல இடங்களில் நிலத்திற்குள் இறங்கி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் வகையில் உள்ளது. இதன் வழியாகவும் மழைநீர் உள்ளே செல்கிறது. இதனால் நகராட்சி குடிநீர் விநியோகம் செய்யும்போது குழாய்களில் கழிவுநீராக வருகிறது.
சில நேரங்களில் தண்ணீரில் கொசு லார்வாபுழு, பூச்சிகள் சேர்ந்து வருகிறது. தண்ணீர் பிடிக்கும் பெண்கள் பல இடங்களில் புகார் செய்து வருகின்றனர். நகராட்சி அலுவலகம் அருகிலேயே உடைந்து தரையுடன் குடிநீர் குழாய் உள்ளதால் இப்பகுதி முழுவதும் குடிநீருடன் கழிவுநீர் சேர்ந்து வருகிறது. மேலும் தெருக்களின் பின்புறம் கன்சர்வேடிவ் பகுதி, தெரு சாலையோரங்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் நிலையும் உருவாகியுள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் நகரில் 3.8 செமீ, தங்கச்சிமடத்தில் 9 மிமீ, பாம்பனில் 7 மிமீ மழை பெய்துள்ளது.