கும்மிடிப்பூண்டி, மே. 18: கும்மிடிப்பூண்டியில் இலங்கை மறுவாழ்வு மையத்தில் இரண்டாம் கட்டமாக 198 வீட்டுகள் கட்ட ₹11.42 கோடி ஒதுக்கப்பட்டு கூடுதல் கலெக்டர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் இயங்கி வருகிறது. இங்கு 937 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 3,000 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இப்பகுதியில் குடியேறிய நிலையில் அவர்களுக்கு தமிழக அரசு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவது வழக்கம். அது மட்டுமல்லாமல் மாதந்தோறும் ஊக்கத்தொகை அரிசி உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 96 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. அந்த வீடுகள் மிகவும் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால் பாதி இலங்கைத் தமிழர்கள் அந்த குடியிருப்பில் குடியேறாமல் எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கிடையில் பல புயல் காரணமாக சுவர்கள் இடிந்தும் மேற்கூரை பறந்த நிலையில் இருந்தது. ஆனால் துறை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் உள்ளிட்டவர்களுக்கு எங்கள் பகுதிக்கு புதிய குடியிருப்புகள் தரமான குடியிருப்புகளை கட்ட வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில், தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன், தமிழகத்தில் உள்ள இலங்கை மறுவாழ்வு மைய முகாமில் வசிக்கும் மக்கள் வீடுகள் இல்லாமல் தவித்து வருவதாக புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் துறை அதிகாரிகள் மூலம் கும்மிடிப்பூண்டி, புழல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மறுவாழ்வு மையங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பேரில் அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளைக் கட்ட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்பு நேற்று திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா, திருவள்ளூர் மாவட்ட ஊரக முகாமை தலைமை பொறியாளர் செந்தில்குமார், பொன்னேரி ஆர்டிஓ கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிர்த மன்னன், இன்ஜினியர்கள் ஐசேக், மணிமேகலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கும்மிடிப்பூண்டி இலங்கை மறுவாழ்வு உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். இதில் ₹11 கோடியே 42 லட்சத்தில் 198 தொகுப்பு வீடுகள் கட்ட ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.
அப்போது ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மற்றும் இதர வீடுகளை அளவீடு செய்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் காண்டிராக்டர்களுக்கு உத்தரவிட்டனர். அப்போது அரசு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இலங்கை அகதிகள் முகாம் தலைவர் சார்பாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதன் படி, புதிய வீடுகள் கட்டுவதற்கான இடங்கள் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது அதுமட்டுமல்ல இங்கிருந்து காலி செய்ய இலங்கை தமிழர்கள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூடுதல் மாவட்ட கலக்டர் சுகபுத்திராவிடம் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் கோரிக்கையை ஏற்று இது சம்பந்தமாக அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் அது மட்டுமல்ல இந்தப் பணி மிக விரைவில் நடத்தப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது செய்தியாளர்கள் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் வீணாகப் போய் உள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேட்டதற்கு அவர் பதில் கூறாமல் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 96 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. அந்த வீடுகள் மிகவும் தரமற்ற நிலையில் கட்டப்பட்டதால் பாதி இலங்கைத் தமிழர்கள் அந்த குடியிருப்பில் குடியேறாமல் எதிர்ப்பை தெரிவித்தனர்.