திங்கள்சந்தை, மே 29: இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கம் போல வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வாசல் முன்பு முதியவர் ஒருவர் வருவோர் போவோரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சில நேரங்களில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களை அவதூறாகவும் பேசினார்.
நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட அவரை இரணியல் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே இரணியல் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். விசாரணையில் அவர் மங்கலகுன்று பகுதியை சேர்ந்த சந்திரமோகன் (50) என்பதும், அதிக மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து நீதிமன்ற மாண்பை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட சந்திரமோகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.