கொடைக்கானல், அக். 18: கொடைக்கானல் நகரட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் விரைவில் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்குள்ள பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பேரிஜம் ஏரி, வட்டக்கானல் போன்ற பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை புரிகின்றனர்.
மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்கின்றனர். அந்த வகையில் சுற்றுலாப் பயணிகள் கூடும் மையப்பகுதியாக நட்சத்திர ஏரி இருந்து வருகிறது. ஏரியில் சுற்றுலாத்துறை சார்பில் இரண்டு படகு இல்லங்களும், நகராட்சி சார்பில் ஒரு படகு இல்லமும் இருந்து வந்தது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சுவாரி செய்து தங்களது சுற்றுலாவை மகிழ்ந்து வருவர். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள படகு இல்லம் மேம்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. படகு இல்லப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ள நிலையில் படகுகளும் வாங்கப்பட்டுள்ளன.
மேலும் அவை அனைத்தும் தயார் நிலையில் படகுகளும் இந்தப் படகு இல்ல நடைபாதை பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் மீதமுள்ள 10 சதவீத பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் நகராட்சி படகு இல்லம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகராட்சி செய்து வருகிறது. இந்நிலையில் விரைவில் கொடைக்கானல் நகராட்சி படகு இல்லம் திறப்பு விழா காண உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.