ஊட்டி,ஆக.17: இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி குன்னூரில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடந்தது. மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 60 சதவீதத்திற்கும் மேல் வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனத்தை பாதுகாக்க வலியுத்தி குன்னூரில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி சார்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் சைக்கிள் மற்றும் பழங்காலத்து வாகனங்கள் பேரணி நடந்தது. இந்த பேரணியின் போது, இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பலரும் சென்றனர்.
இந்த பேரணியை குன்னூர் டிஎஸ்பி குமார் துவக்கி வைத்தார். ஜோசப் பள்ளியில் துவங்கிய இந்த பேரணி குன்னூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். இயற்கையை பாதுகாக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த பேரணி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.