Sunday, June 22, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை!

இயன்ற வரையிலும் இலவச சிகிச்சை!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்மருத்துவமனைகள் இரண்டு வகை. முழுவதும் இலவசமாக சிகிச்சை அளிப்பது முதல் வகை. இதில் அரசு மருத்துவமனைகளுடன் சில தனியார் தொண்டு நிறுவன மருத்துவமனைகளும் அடங்கும். கட்டணங்கள் மட்டுமே பெற்று சிகிச்சை அளிக்கிற தனியார் மருத்துவமனைகள் இன்னோர் வகை. இந்த இரண்டுக்கும் இடையே செயல்படுகிற சில மருத்துவமனைகளும் உண்டு. மிகக்குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் இந்த மூன்றாவது மருத்துவமனைகள் சமயங்களில் ஒரு சில சிகிச்சைகளை இலவசமாகவும் செய்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஆந்திர மஹிளா சபாவின் கீழ் இயங்கும் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை இதில் மூன்றாவது வகையினைச் சேர்ந்தது. சென்னை அடையாறு பகுதியில் இயங்கி வரும் இம்மருத்துவமனை சமூக சேவைகள் மற்றும் பொது நல நடவடிக்கைகளை சமூகத்தின் எளிய மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ஒரு சில சேவைகளுக்காக அரசாங்கத்தின் உதவியையும், பயனாளிகளிடமிருந்து வசூலிக்கும் குறைந்த கட்டணங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியைக் கொண்டு சில மருத்துவ சேவைகளையும் செய்து வருகிறது. இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் என்னென்ன என்று மருத்துவமனையின் நிலைய அதிகாரியும் முதியோர் நல மருத்துவருமான ஹேமாவிடம் பேசினோம்…‘‘120 படுக்கை வசதிகளுடன் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் நலம்,; பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள் நலம், முதியோர் நலம், கண், எலும்பு, பல், இதய மருத்துவம் மற்றும் செவிலியர் பள்ளி, முதியோர் காப்பகம், உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் மற்றும் பள்ளி என பல்வேறு துறைகளுடன் இயங்கி வருகிறது இம்மருத்துவமனை.;இங்கு மருத்துவமனையில் முதியவர்களுக்கு தனியாக இல்லம் இருக்கிறது. வீட்டில் வைத்து பார்க்க முடியாத முதியவர்களை அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தோடு இங்கு தங்க வைத்து மருத்துவ சிகிச்சை, உணவு போன்ற அனைத்தும் கொடுத்து வருகிறோம். வருடத்திற்கு ஒரு முறை ஜூலை மாதம் முதியவர்களுக்கான உடல் நலன் சார்ந்த மருத்துவ முகாமும் இங்கு நடைபெறுகிறது.இந்த முகாமில் 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொண்டு பயனடைகிறார்கள். அதுபோல மருத்துவமனை சார்பாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று முதியவர்களை சந்தித்து அவர்களுக்கு உடல் நலன் சார்ந்த பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்கிறோம். இங்கு பெண்களுக்காக பிரசவம், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை மற்றும் குழந்தையின்மை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு புறநோயாளிகளாக 30 பேர் வருவார்கள். ஸ்கேன் வசதி, ரத்தப்பரிசோதனை, நோயியல் பரிசோதனைக்கூடங்கள் உள்ளன. கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து மாத்திரைகள், ரத்தப் பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் கொடுக்கிறோம்’’ என்கிறார். குழந்தைகள் நல சிகிச்சைப்பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சை பற்றி குழந்தைகள் நல மருத்துவர் சுந்தரம் விவரிக்கிறார்.‘‘இங்கு பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளையும் நாங்களே செய்து வருகிறோம்.அவர்களுக்கு பிறந்தவுடன் கொடுக்கப்படும் தடுப்பூசிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு இலவசமாக வழங்குகிறோம். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்காக இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கும் வசதியும் உள்ளது. ஒரு வயது வரை கொடுக்க வேண்டிய தடுப்பூசி மருந்துகள், சொட்டு மருந்துகளும் இங்கு தரப்படுகிறது.3 மாதத்திற்கு ஒரு முறை நடமாடும் மருத்துவமனை மூலம் ஏழை மக்களின் இருப்பிடத்திற்கே சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி, சொட்டு மருந்துகளை இலவசமாக கொடுத்து வருகிறோம். குழந்தைகள் தினத்தன்று இலவச முகாம் நடத்தியும் சிகிச்சை வழங்குகிறோம்.’’அபர்ணா அகர்வால் (தற்கொலை மீட்பு மற்றும் மனநல மருத்துவர்)‘‘முதியவர்களுக்கு ஏதாவது உடல் நல பிரச்னைகள் என்றால், இந்த வளாகத்திலேயே 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் இம்மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வந்து கவனித்துக் கொள்வார்கள். இவர்களுக்கான யோகா, தியானப் பயிற்சிகள் அளிக்கிறோம். பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸியோதெரபி பயிற்சிகளை அதற்கான பயிற்சியாளர்கள் கொடுக்கிறார்கள். குறிப்பாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட வயதான பெண்கள் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த காப்பகத்தை திருமதி துர்காபாய் தேஷ்முக் நிறுவினார். முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி அம்மையார் 1960-ல் ஐஸ்வரி பிரசாத் தத்தாத்ரேயா என்ற செரிபரல் பால்சி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் நினைவாக துவங்கி வைக்கப்பட்ட இந்த மையமானது ஆரம்பத்தில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் அளிப்பதற்காக இயங்கி வந்தது. பின்னாளில் போலியோ முற்றிலும் நீங்கிய இந்தியாவாக மாறிவிடவே தன்னுடைய கவனத்தை மனநலம் குன்றிய குழந்தைகளின் பக்கம் திருப்பத் தொடங்கியது.இந்த மையத்தின் கீழ் நோயாளிகளுக்கு எலும்பு சிகிச்சை அளிக்கப்படுவதோடு, மனநலம் குன்றிய குழந்தைகளில் உடலியக்கம் பாதித்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள். 18 வயதுக்குமேல் உள்ள மாற்றுத்திறனாளி பெண்களுக்கு பிரிண்டிங், டெய்லரிங் போன்ற தொழிற்பயிற்சிகள் உதவித் தொகையுடன் கொடுக்கப்படுகிறது. இவை தவிர மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கான தொழிற்பயிற்சி கூடத்தில் அவர்களுக்கு மெழுகுவர்த்தி, வீடு சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் கவர்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கிறார்கள். இவர்களுக்கு உதவித் தொகையுடன் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அரசாங்க உதவியுடன் இந்த இலவச சேவைகளை செய்து வருகிறார்கள்.இவர்களுக்கு பிஸியோதெரபி, ஸ்பீச் தெரபி, சிகிச்சைகளை சிறந்த உபகரணங்களோடும், பயிற்சிபெற்ற ஆசிரியர்களின் உதவியோடும் செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த மையத்தின் கீழ் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியும் உள்ளது.’’மதுமதி அச்சுதன் (சிறப்பு குழந்தைகள் பள்ளியின் முதல்வர்)‘‘இந்த மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி இலவசமாக இயங்குகிறது. அவர்களுக்கு தேவையான பயிற்சிகள், இலவசமாக அளிக்கப்படுகிறது. இது போலியோ குழந்தைகளுக்கு தொடங்கி அதன்பிறகு சிறப்பு மாணவர்களுக்கு செயல்படுகிறது. இங்குள்ள சிறப்பு மாணவர்களுக்கு சுய பயிற்சி, தொழிற்பயிற்சி, சுய தொழில் பயிற்சி மற்றும் அவர்களுக்கு தேவையான பல்வேறு தரப்பட்ட தெரபிகள் அளிக்கிறோம். ஓரளவு படிக்கக் கற்றுக் கொண்ட மாணவர்களை ரெகுலர் பள்ளிக்கு அனுப்புகிறோம். எலும்பு சிகிச்சைப்பிரிவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை எலும்பு சிகிச்சைக்காக இலவச முகாம் நடத்துகிறோம். இலவச ஆலோசனை மற்றும் எலும்பு அடர்த்தி பரிசோதனைகள் செய்வதோடு, முகாமிற்கு வரும் நோயாளிகளுக்கு அதன்பின் தொடர்ச்சியாக செய்யப்படும் சில சிகிச்சைகளை இலவசமாகவும், மேம்பட்ட சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சைகளையும் சலுகை கட்டணத்தில் செய்கிறோம். அதேபோல் வருடத்திற்கு ஒருமுறை இலவச கண்சிகிச்சை முகாமும் நடத்தப்படுகிறது. இதேபோல், ரத்தப்பரிசோதனை, சர்க்கரை, கல்லீரல் பாதிப்பு போன்ற பரிசோதனைக்கு மிகவும் குறைந்தபட்ச கட்டணமே வசூலிக்கிறோம். மேலும், அவுட் ரீச் ப்ரோகிராம் மூலம் சென்னையைச் சுற்றி இருக்கிற ஏழை மக்களுக்கு நேரடியாக அவர்கள் வீட்டுக்கு செவிலியர்கள் சென்று அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை ரூபாய் 10 மட்டும் வாங்கிக்கொண்டு ஒரு நோயாளிக்கு அதிகபட்சம் 3 மாதம் வரை அவர்களுக்கான சிகிச்சை,; தேவையான மருந்து மாத்திரைகள் வழங்குகிறோம். இதேபோல் தினமும் இரண்டு வேன்கள் மூலம், முதியோர்கள், ஏழைகள் மற்றும் நடமாட இயலாதவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, 10 ரூபாய்க்கு ஒரு கார்ட் வழங்குவோம். இலவச மருந்துகள் கொடுப்பதோடு மருத்துவர்கள், செவிலியர்கள் உதவியுடன் இலவச சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது. கண் மருத்துவப்பிரிவின் கீழ், மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. அதில் ஆலோசனை பெறும் தகுதிவாய்ந்த நோயாளிகளுக்கு இலவச மருத்துவ உதவிகள் மற்றும் இலவச அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.ஒவ்வொரு வருடமும், இம்மருத்துவமனையின் நிறுவனரான டாக்டர் துர்காபாய் தேஷ்முக் அவர்களின் பிறந்த மாதமான ஜூலை மாதம் முழுவதும் முதியோர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் பண்டிட் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளன்று குழந்தைகளுக்கான மருத்துவப் பரிசோதனை ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. அன்று இலவச சிகிச்சையோடு, இலவச மருந்துகளும் கொடுக்கப்படுகிறது.தொண்டு நிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் உதவியோடு, கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசி மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. மற்றபடி கட்டணம் செலுத்த முடியாத நிலையிலுள்ள நோயாளிகளுக்கு உள்நோயாளிப் பிரிவிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’– உஷா நாராயணன், க.இளஞ்சேரன்படங்கள் : சதீஷ்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi