களக்காடு, அக். 7:நாங்குநேரி அருகே மிட்டார்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திசையன்விளை, மன்னராஜா கோவில் தெருவைச் சேர்ந்த ரூபன் சிம்சோன் மகன் ஜெயசீலன் பிரவின்குமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி பிரவின்குமார் அவரிடம் 16 பவுன் எடையுள்ள இரு தங்க செயின்களை வாங்கியுள்ளார். பின்னர் அவைகளை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் தாயார் பேபி ஜான்சி விக்டோரியா (39) பிரவின்குமாரிடம் நகையை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவின்குமார், பேபி ஜான்சி விக்டோரியாவை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் விஜயநாராயணம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவின்குமாரை தேடி வருகின்றனர்.