பெரம்பூர்: பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, புளியந்தோப்பு சுந்தரபுரம் 4வது தெருவில் வைத்து போலீசார் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 2 அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், புளியந்தோப்பு சுந்தரபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (23), ராகுல்ராஜ் (22), மதன்ராஜ் (38) என்பதும், இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்: ஓட்டேரி தாசமகான் சுபேதார் தெருவில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த இப்ராஹிம் (எ) சமீர் (24), சூரப்பட்டு சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது குல்பான் (27)ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 47 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.