சேலம், ஜூன் 2: இன்று பள்ளிகள் திறப்பையொட்டி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வாங்க பெற்றோர்கள் சேலம் கடைவீதியில் குவிந்தனர். கோடை விடுமுறை நிறைவடைந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தேவையான பேக், டிபன் பாக்ஸ், பென்சில், பேனா, நோட்டு, புத்தகம் உள்ளிட்டவைகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சீருடை வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு சில பெற்றோர்கள் சீருடைகளை கடையில் வாங்கி தருகின்றனர். சேலம் அருணாசல ஆசாரி தெரு, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி கடைகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வாங்க பெற்றோர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களது குழந்தை ஏற்ப சீருடை தேர்வு செய்து வாங்கிச்சென்றனர். ஜவுளியாக எடுத்து டெய்லரிடம் தைத்து வர காலதாமதம் ஏற்படுவதால், பலர் ரெடிமேடாக விற்கும் சீருடைகளை தங்களது குழந்தைகளுக்கு வாங்கி தருகின்றனர்.
பள்ளிகள் திறப்பையொட்டி பள்ளி சீருடை விற்பனை, வழக்கத்தை காட்டிலும் 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.