திருவாரூர், ஆக. 19: திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் மற்றும் 2 கட்டங்களாக நடைபெற்ற பணியில் விண்ணப்பம் அளிக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் நேற்று முதல் துவங்கியது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டு காலத்திற்குள்ளாகவே தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15ம் தேதி முதல் செயல்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கும் பணியை தர்மபுரியில் கடந்த மாதம் 24ம் தேதி துவக்கி வைத்தார். தொடர்ந்து, திருவாரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவங்கியது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 771 ரேஷன்கடைகளில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 748 குடும்ப அட்டைதாரர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் வரப்பெற்று விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக, மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய வருவாய் வட்டங்களில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 818 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
2ம் கட்டமாக நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் ஆகிய வருவாய் வட்டங்களில் கடந்த 11ம் தேதி வரையில் நடைபெற்ற முகாமில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 23 விண்ணணப்பங்கள் பெறப்பட்டது. மாவட்டம் முழுவதும் 9 தாலுகா பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 841 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் மாற்றுதிறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வரும் குடும்பத்தினர்களில் இந்த பயனாளிகளை தவிர அந்த குடும்பங்களில் தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் ஏற்கனவே 2 கட்டங்களில் விண்ணப்ப படிவம் வழங்காதவர்கள் ஆகியோருக்கான சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் நேற்று முதல் துவங்கியது.
திருவாரூர் மாவட்டத்திலும் இந்த சிறப்பு முகாமானது ஏற்கனவே நடைபெற்ற இடங்களில் நேற்று துவங்கியது. மேலும் இந்த முகாமானது இன்றும் (19ம் தேதி), நாளையும் (20ம் தேதி) நடைபெறவுள்ள நிலையில் இதில் ஏற்கனவே விடுப்பட்டு போன விண்ணப்பதாரர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் குடும்பம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெற்று வரும் குடும்பத்தில் இருந்து வரும் தகுதிவாய்ந்த பெண்கள் இந்த மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.