நன்றி குங்குமம் டாக்டர் கவர் ஸ்டோரிசமீபகாலமாக தமிழகத்தில் அடிக்கடி புயல் சின்னம் உருவாவதும், தேவைக்கதிகமாக மழையைக் கொட்டித் தீர்த்துவிட்டு மறைந்துவிடுவதுமாகவே இருக்கிறது. பருவமழையால் மட்டுமே நமக்குத் தேவையான தண்ணீர் தேவையையும், உணவு உற்பத்தியையும் நிறைவு செய்துகொள்ள முடியும். ஆனால், தேவைக்கும் அதிகமாக பெய்யும் மழை தேவையற்ற சேதங்களை மட்டுமே உண்டாக்கிவிட்டுச் சென்றுவிடுகிறது. சமீபத்திய கஜா புயலும் அதையே உணர்த்தியிருக்கிறது.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், முன்பே இதுபற்றி கூறியிருந்தார். ‘இனி நமக்கு பருவ மழை இல்லை, புயல் மழைதான் உண்டு என்று எச்சரித்திருந்தார். அதற்கு அவர் தந்த விளக்கம் என்ன தெரியுமா?‘1987-ல் இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு வந்திருந்த சுற்றுச்சூழல் கழகத்தின் தலைவர் என்னிடம், ‘இனி உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று சொன்னார்’ ஏன் என்று கேட்டதற்கு, ‘உங்களுடைய மேற்குத் தொடர்ச்சிமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அவை அரபிக் கடலிலிருந்து வருகிற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக கீழே இறக்குகின்றன.அந்த மழை நீர் பூமியில் இறங்கி பின்னர் ஆற்று நீராக ஓடுகிறது.அந்த மலையில் உள்ள உயரமான மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரம் உள்ள ‘டீ’ தோட்டம் போட்டுவிட்டீர்கள். உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக்கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகிற தண்ணீரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால், எங்கு பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவமழைக்கு வாய்ப்பே இல்லை’ என்றார்.அவர் சொன்ன நாளிலிருந்து உற்று கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதேதான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகிற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அத்தனை கட்டுரைகளிலும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை’ என்று நம்மாழ்வார் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.இதுபோன்ற பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய நோய்கள் பற்றி பொது மருத்துவர் ஜெயசித்ராவிடம் பேசினோம்…‘‘பருவ நிலை மாற்றத்தால் நோய் பாதிப்பின் வேகம் அதிகரிக்கிறது. புதிய புதிய கிருமிகளும் உருவாகி மருத்துவ உலகுக்கு சவால் விடுக்கின்றன. புயல், மழை, வெள்ளத்தால் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நீர்நிலைகள் மாசுபட்டு நீரால் பரவும் நோய்களான டைபாய்டு காய்ச்சல், காலரா, எலிக்காய்ச்சல், ஹெப்படைட்டிஸ் ஏ போன்ற நோய்களும், கிருமிகளால் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். சுகாதாரமற்ற நீரை பருகுவதால் இரைப்பை குடல் நோய்களான வாந்தி, பேதி போன்றவையும் வருகிறது.கோடைக்காலங்களில் இப்போதெல்லாம் வெப்பக்காற்று வீசுவது சகஜமாகிவிட்டது. இதில், அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும், வயதானவர்களும்தான். வெப்பச்சோர்வு, வெயில் கொப்புளங்கள், சன் ஸ்ட்ரோக் போன்றவை வரும். உடலில் நீர்ச்சத்து குறையும்போது மயக்கம் வந்து சில நேரங்களில் மரணிக்கவும் நேரிடும்.வெயில் காலங்களில்தான் அதிகமாக அம்மை நோய் குழந்தைகளுக்கு வரும். பெரும்பாலும், கோடை காலத்தில்தான் சிறுநீரகத்தில் கல் உருவாகும். வியர்வை மூலமும் நீர் வெளியேறுவதோடு, போதிய நீர் அருந்தாமல் சிறுநீரகத்தில் பெரிய அளவில் கல் உற்பத்தியாகிவிடும். மேலும் பலருக்கு தலைசுற்றல், மயக்கம் வரக்கூடும். வெப்பத்தைத் தணிக்க இயற்கை பானங்களை அருந்தாமல், இனிப்பு அதிகமுள்ள கூல்டிரிங்ஸ்களை அருந்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.அதிக குளிரால் ஓசோன் படலம் மாசுபட்டு மக்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா, ப்ராங்கைட்டிஸ் போன்ற நோய்களும் வரக்கூடும்’’ என்கிறார்.யோகா மற்றும் இயற்கை மருத்துவரான இந்திரா தேவியிடம் விவசாய உற்பத்தி மற்றும் இயற்கை வளங்களில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பேசினோம்…‘‘பருவநிலை மாறுபாட்டின் கோரப்பிடியில் இன்று மனிதன் சிக்கித் தவிக்கிறான். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் அளவுக்கதிகமான மழை அல்லது வறட்சி இந்த இரண்டுமே விவசாயத்தை பாதித்துவிடும். அதிக மழையின்போது பயிர்கள் தண்ணீரில் அழிவதும், வறட்சியின்போது தண்ணீரின்றி வாடுவதும் சமூக பிரச்னைகளை உருவாக்கும்.நம்நாட்டு மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனர். உணவு தானிய உற்பத்தி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு விவசாயினுடைய வாழ்வாதாரம். பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.இதனால் வேளாண்மை விளைச்சல் குறைவதோடு, கால்நடைகள் வளர்ப்பிலும் பாதிப்பு ஏற்பட்டு, கிராமப்பகுதிகளில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதன் காரணமாக, மனிதனின் உடல்நலம், பாதிக்கப்படுவதோடு, மனிதர்களின் வாங்கும் சக்தியும் பாதிக்கப்படும். நீர் நிலை அமைப்புக்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும்போது, கடல்சார் மீன்பிடிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள். அதே நேரத்தில், கடுமையான வறட்சி ஏற்பட்டாலோ, மக்கள் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும்.உலகில் உள்ள காடுகள் நாம் சுவாசிக்கும் காற்றை தூய்மைப்படுத்துவதோடு, தண்ணீர் சுத்தமாக இருப்பதற்கும்,; மண் பிடிப்போடு இருப்பதற்கும் உதவுகின்றன. காடுகளிலிருந்து உணவுப் பொருட்கள், மரப் பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் மனிதர்களுக்கு கிடைப்பதோடு, மிருகங்களுக்கும் புகலிடம் அளித்து வருகிறது.புவி வெப்பமயமாவதற்கு காரணமான பசுமை இல்ல உமிழ்வுகளை காடுகளில் உள்ள மரங்களும், செடிகளும் கிரகித்துக்கொள்வதால், பருவநிலை மாற்றத்தை தடுக்கின்றன. ஆனால், மரப்பொருட்களுக்காகவும் வீடு கட்டுமானப் பொருட்களுக்காகவும் மற்றும் நகரமயமாக்கல் காரணமாகவும் வனங்கள் பெருமளவு அழிக்கப்படுவதால், பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் வளிமண்டலத்தில் கலந்து புவி வெப்பமயமாதலை ஊக்குவிக்கின்றன.இதற்கெல்லாம் பிராயச்சித்தமாக, இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் ஒரு சபதம் ஏற்போம். இனி ஒவ்வொருவரும் மரம் நட ஆரம்பிப்போம். பெரிய அளவு விவசாயம் செய்ய முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் அவரவர் வீட்டு மாடியிலேனும், தங்கள் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய காய்கறி, கீரை செடிகளை பயிரிட்டு இந்த உலகத்தை பாதுகாப்போம்’’ என்கிறார்.
இனி பருவமழையே இல்லை… புயல் மழைதான்!
57
previous post