காரைக்கால்,நவ.22: காரைக்காலில் இந்திராகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு பன்மொழி நல்லிணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் நாளான நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை சார்பில் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்மொழி நல்லிணக்க நாள் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மேல்நிலைப்பள்ளி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி துணை முதல்வர் பாஸ்கரன் மற்றும் ஆசிரிய பெருமக்கள் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் துணை ஆட்சியர் ஜான்சன் பேசுகையில், இந்தியாவில் பல மாநிலங்கள் பல மொழிகள் பல இனங்கள் இருந்தாலும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இதற்கு அடித்தளமாக மாணவர்கள் தான் இருக்க வேண்டும். மதத்தால் இனத்தால் மொழிகளால் நாம் வேறுபட்டாலும் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் உங்கள் பங்கு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.