கோவை, மே 29: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் கிருஷ்ணா (17). முன்னாள் சர்வதேச ஸ்கேட்டிங் வீரர் மற்றும் பயிற்சியாளர் ராகுல் பாண்டியனிடம் கடந்த 8 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்ற மாணவன் கிஷோர் கிருஷ்ணா இதுவரை தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் 2 முறை தங்கம் வென்றுள்ளார். இந்நிலையைல் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு இடையேயான தேர்வு போட்டி சண்டிகரில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சார்பாக மொத்தம் 63 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மாணவன் கிஷோர் கிருஷ்ணா சிறப்பாக விளையாடி உலக ஸ்கேட்டிங் விளையாட்டுக்கான இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் கிஷோர் கிருஷ்ணா இத்தாலியில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ள டவுன்ஹில் போட்டியில் கலந்துகொள்கிறார். இந்த போட்டிக்கான செலவுகளை தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கீழ் நிதி உதவி செய்யப்படவுள்ளது.