ஊட்டி, அக். 4: மறைந்த பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி கூட்டம் ஊட்டி எஸ்ஆர்விஎஸ் பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் அனிதா தலைமை வகித்தார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,“இந்திய மக்களின் உணவு பாதுகாப்பிற்கு அடித்தளமிட்டவர் டாக்டர் சுவாமிநாதன். 1950களில் உலகம் முழுவதிலும் பல கோடி மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க விஞ்ஞானி போர்லாக்சுடன் இணைந்து பசுமை புரட்சியை இந்தியாவில் உருவாக்கினார்.
அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு நாம்தான் உணவு கொடுக்கிறோம் என்று தற்பெருமை பேசிய காலத்தில் தமது அறிவியல் அறிவால் உணவு உற்பத்தியில் பிற நாடுகளை சார்ந்திருக்காமல் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றிய பெருமை விஞ்ஞானி சுவாமிநாதனையே சேரும்’’ என்றார். இன்று இந்தியாவின் 140 கோடி மக்களின் உணவு தேவை போக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது’’ என்றார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மறைந்த விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.