ஈரோடு, பிப். 13: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் கட்சியின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து பேசினர். தொடர்ந்து, கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: இந்தியாவில் எந்த கட்சியும் சந்திக்காத அடக்கு முறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்துள்ளது. 3 முறை கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது, அந்த தடையின் நோக்கம் தெரியாத நிலை நிலவியது. சிலர் தலைமறைவாகவும், சிலர் சிறை வாழ்க்கையையும் சந்தித்தனர். இதில், பலர், 14 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்துள்ளனர். அப்படி, இந்த இயக்கத்துக்காக பாடுபட்டு, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள், தலைவர்களாக இருந்து வழி நடத்தியவர்கள் இன்றும் தியாகிகளாக நம்மிடையே நினைவிலும், நேரிலும் வாழ்ந்து வருகின்றனர்.
யானைக்கு தன் பலம் தெரியாது என்பதை போல நமது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்தை முழுமையாக அறிந்தவர்கள் இல்லை. கட்சியில் உள்ள நாமே, நமது பலத்தை முழுமையாக உணர்ந்ததில்லை. கட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கட்சியின் வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. அதைப் படித்தால், கட்சியின் கடந்த கால போராட்ட வரலாறுகளையும், செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ளலாம். எல்லோருக்கும் தெரிந்த, பலருக்கும் தெரியாத தகவல்களையும் சேகரித்து அதில் வெளியிட முயற்சித்துள்ளோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 15, 16, 17, 18ம் தேதிகள் 4 நாள்கள் சேலத்தில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ரமணி உள்பட திரளான முன்னாள், இன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். வட்டாரப் பொருளாளர் மகேஷ் நன்றி கூறினார்.