திருச்சி, பிப்.24: தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை என்ற பெயரில், இந்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் திருச்சி ஜங்சன் காதி கிராப்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில் இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் திக தலைமைக்கழக பேச்சாளர் பூவை புலிகேசி மாற்று கட்சியினரான திமுகவின் திருச்சி மாநகர மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரெக்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் வெற்றிச்செல்வன், இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹபிபு ரஹ்மான், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் லதா, மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர் செழியன் ஆகியோர் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். முன்னதாக திக கட்சியின் மாவட்ட மகாமணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.