மாமல்லபுரம்: இந்தியா முழுவதும் ஆட்டோவில், 13,700 கி.மீ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தம்பதிக்கு, மாமல்லபுரத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி நாட்டை சேர்ந்த தம்பதி ஆடம்-ஜென்னி. இத்தாலியில் ஆடம், கிரேன் ஆபரேட்டராகவும், ஜென்னி மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதி இந்தியா முழுவதும் ஆட்டோவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து வாழ்வியல் முறைகளை தெரிந்து கொள்ள திட்டமிட்டனர்.
இதற்காக, இவர்கள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் மாமல்லபுரம் வந்தனர். பின்னர், மாமல்லபுரத்தில் இருந்து ஒரு ஆட்டோ மூலம் புறப்பட்ட இவர்கள் கேரளா, கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, கொல்கத்தா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் அன்றாட வாழ்வியல் முறைகளை தெரிந்து கொண்டனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் 13,700 கி.மீ தூரம் ஆட்டோவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, நேற்று மதியம் மாமல்லபுரம் வந்த ஆடம்-ஜென்னி தம்பதிக்கு தனியார் விடுதி நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.