தாம்பரம், ஆக.7: இந்தியா கூட்டணியில் மேலும் பல தேசிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது, என டி.ஆர்.பாலு எம்பி தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, திருமலை நகர், கவுரிவாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் ஆகிய 3 பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் வீதம் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 3 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 3வது மண்டல அலுவலக வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்த அவர்கள், செம்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாமை பார்வையிட்டனர். பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கு தாம்பரம் மாநகராட்சியில் விண்ணப்பங்கள் பெறும் முகாம் சிறப்பாக நடைபெறுகிறது.
செம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடுகளை தயார் செய்து தரும்படி கூறியுள்ளேன். தாம்பரம் ரயில் முனையம் முக்கியமான ஒன்றாக உள்ளதால் பயணிகள் தேவைக்கு தாம்பரம் ரயில் முனையத்தில் எல்லா விரைவு ரயில்களும் நின்றுதான் செல்ல வேண்டும். தேஜாஸ் ரயில், வந்தே பாரத் ரயில் என எதுவாக இருந்தாலும் ஒரு நிமிடம் நிற்பதால் மக்களுக்கு நன்மை தான். ஒரு நிமிடம் ரயில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் எந்த தாமதமும் ஏற்பட்டு விடாது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றம் வர சபாநாயகர் விரைவாக நடவடிக்கை எடுப்பார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அவர் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. குஜராத் நீதிமன்ற உத்தரவுக்கு எவ்வளவு விரைவாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் ராகுல்காந்தியை பதவி நீக்கம் செய்தாரோ, அதேபோல ராகுல்காந்தி நாடாளுமன்றம் வருவதற்கும் விரைவில் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார். இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் வரும் 31ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த கூட்டத்தில் தேர்தல் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தியா கூட்டணியில் பல தேசிய அளவிலான கட்சிகள் இணைய அதிக வாய்ப்புள்ளது,’’ என்றார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள் ஜெயபிரதீப் சந்திரன், டி.காமராஜ், எஸ்.இந்திரன் உட்பட பலர் இருந்தனர்.