புதுச்சேரி, செப். 2: புதுச்சேரியில் முதல்முறையாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி வருகிற செப். 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை புதுச்சேரி துத்திப்பட்டு சீக்கெம் விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதற்காக 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் 15 பேர் கொண்ட பட்டியலை ஜூனியர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் விளையாடுகின்றன. இதில் 3 ஒருநாள் போட்டிகள் செப்.21, 23, 26ம் தேதிகளில் புதுவையில் நடைபெற உள்ளது. 2 நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் சென்னையில் செப். 30ம் தேதி மற்றும் அக். 10ம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் புதுச்சேரியில் நடைபெறும் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான போட்டி அவருக்கு அறிமுகப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அண்டர் 19 இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டிகள் புதுவையில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை சிறப்பாக நடத்த புதுச்சேரி சீக்கெம் விளையாட்டு மைதானம் முடிவு செய்துள்ளதாக மைதானத்தின் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.