இந்தூர்: இந்திய அணியுடன் நடந்த 3வது டெஸ்டில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கும் முன்னேறி அசத்தியது. ஹோல்கர் ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 197 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி 11 ரன்னுக்கு கடைசி 6 விக்கெட்டை இழந்தது. இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 4, அஷ்வின், உமேஷ் தலா 3 விக்கெட் எடுத்தனர்.இதையடுத்து, 88 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 163 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. புஜாரா 59, ஷ்ரேயாஸ் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் நாதன் லயன் 23.3 ஓவரில் 1 மெய்டன் உள்பட 64 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றினார். குனேமன், ஸ்டார்க் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாளில் 14 விக்கெட் சரிந்த நிலையில், 2வது நாளில் 16 விக்கெட் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாளான நேற்று, 76 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. மிக எளிய இலக்கு என்றாலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இந்திய ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவை விரைவாக சுருட்டி வீசி ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்துவதற்கான வாய்ப்பும் இருந்தது. கவாஜா, ஹெட் இருவரும் துரத்தலை தொடங்கினர். அஷ்வின் வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே கவாஜா டக் அவுட்டாகி நடையை கட்ட, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால்,ஹெட் – லாபுஷேன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த… ஆஸ்திரேலியா 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஹெட் 49 ரன் (53 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), லாபுஷேன் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லயன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலமாக, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது மற்றும் கடைசி டெஸ்ட் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் 9ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டியில் வென்றால் இந்திய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறலாம்….