புதுச்சேரி, மே 20: புதுவையில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் வைத்திருந்த அமெரிக்க பெண் டாக்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக பயணிகளின் உடமைகளை விமான ஊழியர்கள் சோதனை செய்தபோது, வெளிநாட்டு இளம்பெண் பயணியிடம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஊழியர்கள், சென்னை இண்டிகோ விமான நிலைய அதிகாரிகளுக்கும், லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.பி ரகுநாயகம், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் விமான நிலையத்துக்கு வந்து வெளிநாட்டு பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் அமெரிக்காவை சேர்ந்த கண் டாக்டர் ரேச்சல் அனி (32) என்பதும், கடந்த 11ம் தேதி அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் வெங்கடேசன் என்பவரை சந்தித்து பேசியதும் தெரியவந்தது.
மேலும், ரேச்சல் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கிய நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் பகல் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் சென்று, அங்கிருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அமெரிக்க பெண் டாக்டர் ரேச்சல் அனி மீது வழக்குபதிந்து சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, இவ்வழக்கு குறித்து லாஸ்பேட்டை போலீசாரை டிஜிபி ஷாலினிசிங் நேரில் அழைத்து விசாரித்துள்ளார்.
மேலும், ரேச்சல் சந்தித்து பேசிய மருத்துவர் வெங்கடேசனையும் லாஸ்பேட்டை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். பின்னர் ரேச்சலை, வெங்கடேசனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தயார் செய்து, இன்னும் சில நாட்களில் புதுச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும், அதுவரை ரேச்சல் புதுவையில் இருக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், வெளிநாட்டு பயணி ஒருவர் சாட்டிலைட் போன் வைத்திருந்த சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.