Monday, June 16, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்

இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்டுனா மீன் ஆசிய கண்டத்தில் ஒரு பிரபலமான மீன் வகையாகும். இது இந்தியாவில் இருந்து உலக அளவில் அதிகம் ஏற்றுமதி ஆகிற மீனும் கூட. இதை தமிழில் ‘சூரை மீன்’ என்கிறார்கள். இது மீன் வகைகளிலேயே அதிக புரதச்சத்தையும், குறைந்த கொழுப்புச் சத்தையும் உடையதாக இருக்கிறது. உலக அளவில் பிரபலமாவதற்கு இதுவே காரணமாக இருக்கிறது. டயட்டீஷியன் மலர்க்கொடியிடம் டுனாவில் அப்படி என்ன சிறப்புகள் என்று கேட்டோம்…‘‘நூறு கிராம் டுனா மீனில் எனர்ஜி – 136 கலோரிகள், நீர்ச்சத்து – 10.4 கிராம், நைட்ரஜன் – 3.79 கிராம், புரோட்டின் – 23.7 கிராம், கொழுப்பு – 4.6 கிராம், சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் – 1.0 கிராம், பாலி அன் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் – 1.60 கிராம், கொலஸ்ட்ரால்- 3.0 மி.கிராம், ரெட்டினால் வைட்டமின் ஏ -26 மைக்ரோ கிராம், கரோட்டின் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளது. மேலும் தயாமின் 0.10 மி.கி, ரிபோபிளாவின் – 0.13, நியாசின் – 12.8 மி.கி, ட்ரிப்ட்டோபன் – 4.4 மி.கி, வைட்டமின் ஈ – 60.38 மி.கி, வைட்டமின் பி – 12 -4.0 மி.கி, ஃபோலேட் – 15 மைக்ரோகிராம், சோடியம் – 47 மி.கி, பொட்டாசியம் – 400 மி.கி, கால்சியம் – 16 மி.கி, மெக்னீசியம் – 33 மி.கி, பாஸ்பரஸ் – 2.30 மி.கி, இரும்பு – 1.30 மி.கி, காப்பர் – 0.15 மி.கி, செலினியம் – 002 மி.கி, அயோடின் – 30 மி.கிராம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த அதிக அளவுடைய சத்து வேறு எந்த மீனிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, அசைவ உணவுகளில் கடல் உணவுதான் சிறந்ததாக இருக்கிறது. குறிப்பாக மீன் வகைகள் ஒவ்வொன்றும் அசைவ உணவு பிரியர்களுக்கு ஆரோக்கியமான விஷயம். ஏனென்றால், கடல் உணவுகளில் ஏராளமான ஒமேகா – 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது மூளைக்கும், இதயத்துக்கும் மிகவும் நல்லது. இதனால் நினைவுத்திறன் அதிகரிக்கும். டிமென்ஷியா மற்றும் அல்ஸைமர் போன்ற மறதிநோய் வராமல் தடுக்கிறது.அதுபோல டுனா மீன் சற்று கூடுதல் சத்துக்களை உடையதாக இருக்கிறது. இதில் புரதச்சத்து மிகுதியாக இருக்கிறது. அதுவும் கொழுப்புச்சத்து குறைந்த புரதச்சத்துக்களை உடையதாக இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு டுனா மீன் சிறந்த உணவாக இருக்கிறது. குழந்தைகளின் ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைபாட்டையும், நடத்தைக் கோளாறுகளையும் சரி செய்யும்; DHA(Docosahexaenoic acid) என்ற வேதிப்பொருள் அதிகமாக இருக்கிறது.இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. பக்கவாதம் பிரச்னைகளை சரி செய்கிறது. இது குறைந்த கொழுப்பு உள்ள மீன். இந்த மீனின் எண்ணெயிலுள்ள EPA(Eicosapentaenoic acid) மற்றும் Docosahexaenoic acid(DHA) மற்றும் இயற்கையான ஒமேகா-3 – கொழுப்பு அமிலம் போன்றவை அதிகமாக உள்ளது.பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்படுகிற மன அழுத்தத்தை குறைக்க டுனா மீன் பயன்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தை விரைவில் குறைக்கிறது. மகப்பேறு காலத்தில் உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பொதுவாக, கடல் மீன் உண்பதன் மூலம் மன இறுக்க நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. கண் பார்வை நன்றாக தெரிவதற்கும் மூளைத்திறன் அதிகமாகவும் இருப்பதற்கு டுனா மீன் உதவுகிறது. டுனா மீன் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தவிர்ப்பதோடு புற்றுநோய் நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகவும் இருக்கிறது. புற்றுநோய் கிருமிகளை கொல்கிறது.குறைந்த ரத்த அழுத்த பிரச்னையை போக்குகிறது, சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் நமது சருமத்தை மினுமினுக்கும் அழகுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமநோய்களை அண்டவிடாமல் பார்த்துக் கொள்கிறது. முதுமைக் காலத்தில் Collagen சிதைவால் ஏற்படும் சரும சுருக்கத்தையும் குறைக்கிறது. மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கிறது. டுனா மீன் பார்ப்பதற்கு சிவப்பு இறைச்சியைப் போல் இருக்கும். ஆனால், சிவப்பு இறைச்சியைவிட மிருதுவாக இருக்கும். இதில் மற்ற மீன்களை போல் முட்கள் இருப்பதில்லை, இது சமைப்பதற்கு எளிதானதாகும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பகப் புற்றுநோயை வராமல் தடுக்கிறது. தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு உதவுகிறது. ரத்தசோகை உள்ள பெண்களுக்கு டுனா மீன் நல்ல வரப்பிரசாதம். இந்த மீனை குழம்பு முறையிலும், அவியல் முறையிலும் செய்து சாப்பிடுவது அதன் பயன்களை முழுமையாக பெற முடியும். இந்த மீனை வாழை இலையில் சுற்றி இட்லி வேக வைப்பதுபோல் வேக வைத்து ஃப்ரூட் சாலட்டோடு கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு கொடுத்து பழகலாம். அவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ற உணவாக இருக்கும். டுனா மீனை வளரும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 5 முறை கொடுத்து வருவது நல்லது.இந்த மீனில் தேவையான அளவு கால்சியம் இருப்பதால் எலும்பு வலுவடைய உதவுகிறது. எலும்பு சார்ந்த பிரச்னைகளை போக்குகிறது. சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு இந்த மீன் சிறந்த மருந்தாகிறது. டுனா மீனை தொடர்ந்து சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது. குறிப்பாக, மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக பாய்வதற்கு டுனா மீனின் சத்துக்கள் உதவுகிறது.உடல் பருமன் மிக்கவர்கள் தொடர்ந்து சாப்பிடும்போது அவர்களுக்குத் தேவையான புரதச்சத்தை தருவதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. கடலோர மாவட்டங்களில் இருக்கிற மக்களுக்கு இந்த மீன் எளிதாகக் கிடைக்கும். அவர்கள் இந்த மீனை வாங்கி பயன்படுத்துவது நல்லது. நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் இந்த மீனை எந்த வித அச்சமுமின்றி எடுத்துக்கொள்ளலாம். இதில் நீரிழிவை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் தங்களுடைய அசைவ உணவு பட்டியலில் டுனா மீனை முதல் இடத்தில் வைக்க வேண்டும். ஏனெனில், இது புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவுகிறது. டுனா மீன் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் இந்த மீனை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். டுனா மீனை பயன்படுத்தும்போது அதிக மசாலா பொருட்கள் இல்லாமல் எடுத்துக்கொள்வது நல்லது. வெறுமனே நீரில் வேகவைத்தோ அல்லது நீராவியில் அவித்தோ சாப்பிடலாம். இது இன்னும் நல்லது. இது பக்கவாத நோய்களுக்கு சிறந்ததாகவும் நரம்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. டுனா மீனை ஒருவர் ஒரு நாளைக்கு 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம்.இது விலையில் சற்று கூடுதலாக இருக்கிறது. ஆனால், கடலோர வாழ் மக்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும். நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை, புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் டுனா மீனை அடிக்கடி அதாவது வாரத்திற்கு 5 முறையும், பொதுவானவர்கள் வாரத்திற்கு ஒரு முறையும் எடுத்துக்கொள்வது நல்லது.ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ரத்தசோகை இருப்பவர்கள், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், மூளை சார்ந்த பிரச்னைகள் உள்ளவர்கள், கண் பார்வை பாதிப்புகள், நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் இந்த மீனை தொடர்ந்து பயன்படுத்துவது அவர்களுக்கு நல்ல பயனை தரும். டுனா மீன் நல்ல உணவாகவும், சிறந்த மருந்தாகவும் இருக்கிறது’’ என்கிறார்.– க.இளஞ்சேரன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi