என் மகனுக்கு ஐந்து வயதாகிறது. அவன் பிறக்கும் போதே எலும்பு சம்மந்தமான பிரச்னை இருப்பதாக டாக்டர் கூறினார். அதாவது அவனது மூட்டு எலும்புகள் மிகவும் மிருதுவாக இருக்கும். அதனால் மூட்டு உள்ள விரல் பகுதி எல்லாம் எளிதாக வளைந்து கொடுப்பது போல் உள்ளது. இதனால் அவனுக்கு எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுமா. மூட்டு பிரச்னைகள் வருமா? அவனுடைய மூட்டு பகுதி மற்றும் எலும்பினை வலுவாக்க என்ன செய்யலாம்?- ரவிசங்கர், திருவேற்காடு.வாசகரின் இந்த சந்தேகத்துக்கு விடையளிக்கிறார் குழந்தைகள் எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் விஜய் ஸ்ரீ ராம்.
உங்கள் மகனுக்கு இருக்கும் பிரச்னைக்கு ஹைபர் மொபிலிட்டி சிண்ட்ரோம் என்று பெயர். ஹைபர் மொபிலிட்டி சிண்ட்ரோம் என்பது பிறக்கும் போதே மூட்டுகளில் ஏற்படும் குறைபாடு. இந்த பிரச்சனை ஹெரிடிட்டி காரணமாக ஏற்படும். அதாவது அப்பா அம்மாவிற்கு இந்த பிரச்னை இருந்தால் அது குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக பெண் குழந்தைகளில் இந்த பிரச்னைகள் அதிகம் ஏற்படும். மேலும் பிறக்கும் குழந்தைகளில் இரண்டு சதவிகிதகுழந்தைகளுக்கு இந்த பிரச்னை உள்ளது.அப்பா அம்மா இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு இந்தப் பிரச்னை இருந்தால், சாதாரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்படும். டவுன்சிண்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இந்த பிரச்னை கண்டிப்பாக தாக்கும். அதே போல் ஜுவனைல் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ், மார்பன் சிண்ட்ரோம், எலெர் டான்லெஸ் சிண்ட்ரோம் பிரச்னை இருந்தாலும் அந்த குழந்தைகளுக்கு ஹைபர் மொபிலிட்டி பிரச்னைகள் ஏற்படும்.என்னென்ன சிகிச்சை?இந்த பிரச்னைக்கு மருந்து மாத்திரை அவசியம் இல்லை. மாறாக அவர்கள் எலும்பு மூட்டுகளை வலுப்படுத்துவதற்கான சிகிச்சை முறையான பிசியோதெரபியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் வளர்ந்த பிறகு எந்த பிரச்னையும் ஏற்படாது. டவுன் சிண்ட்ரோம் பாதிப்புடையவர்கள் அதற்கான சிறப்பு சிகிச்சை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பிசியோதெரபியும் மேற்கொள்ள வேண்டும். சிகிச்சையால் எலும்பு மூட்டுகள் வலுவடையுமே தவிர எலும்பு மூட்டுகளில் உள்ள தளர்வில் மாற்றமிருக்காது. மேலும் அவர்களின் உடல் அமைப்பிலோ அல்லது உடற்கூற்றிலோ மாற்றம் ஏதும் ஏற்படாது. என்னென்ன பாதிப்பு ஏற்படும்?பெரும்பாலான குழந்தைகளுக்கு இது டொமைன் கண்டிஷனாக தான் இருக்கும். அதாவது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஹைபர் மொபிலிட்டி உள்ள குழந்தைகளின் எலும்பு மூட்டுகள் மிகவும் தளர்வாக இருக்கும். அதாவது அவர்கள் உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிலும் இந்த பிரச்னை இருக்கும். இவர்கள் மூட்டு பகுதி தளர்வாக இருக்கும் காரணத்தால் நாம் எப்படி வளைத்தாலும் வளையும். இதனால் அவர்களிடம் நடப்பதிலோ அல்லது விைளயாடும் போதோ கீழே விழுந்தாலோ எலும்பு முறிவு ஏற்படாது. ஆனால் சில நேரங்களில் எலும்பு மூட்டு பகுதி இடம் பெயரும் வாய்ப்புள்ளது. அதனால் அவர்கள் விளையாடும் போதோ அல்லது கடினமாக வேலை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மூட்டு பகுதியில் உள்ள எலாஸ்டிசிட்டி குறையவும்; வாய்ப்புள்ளது.டவுன் சிண்ட்ரோம் விபரீதம்!டவுன் சிண்ட்ரோம் என்பதும் பிறக்கும் போதே ஏற்படும் பாதிப்பு என்பதால் அவர்களுக்கு ஹைபர் மொபிலிட்டி பாதிப்பு இருக்கும். மேலும் சிண்ட்ரோம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஹைபர் மொபிலிட்டி பிரச்னையை தவிர்த்து அவர்கள் மனவளர்ச்சி குன்றியவர்களாக இருப்பார்கள். சிலருக்கு இருதய பிரச்னை அல்லது கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அவர்களுக்கு இருக்கும் சிண்ட்ரோம் தாக்கத்தைப் பொருத்து ஹைபர் மொபிலிட்டி தவிர உடலிலும் சில பாதிப்புகள் ஏற்படுத்தும்.தொகுப்பு : ப்ரியா