திருவாரூர், செப். 28: திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. விதை நெல் 220 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும்
தேவையான இடுபொருட்களும் தயாராக உள்ளதாக வேளாண் இணை இயக்குனர் (பொ) லெட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பில் ஆயிரம் கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து தஞ்சை மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தூர்வாரப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த நிலையில் பின்னர் குறுவை சாகுபடிக்காகஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையினையும் திறந்து வைத்து குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்துள்ளார்.
இதைமுன்னிட்டு விவசாயிகள் மும்முரமாக குறுவை சாகுபடி பணியில் ஈடுப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் போர்வெல்கள் மூலம் 50 ஆயிரம் ஏக்கரிலும், அதன் பின்னர் மேட்டூர் அணை நீரினை கொண்டு ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கரிலும் என மொத்தம் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே டெல்டா மாவட்டங்களின் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு அரசு சார்பில் ரூ 75 கோடியே 95 லட்சம் மதிப்பில் இடுபொருட்கள் வழங்குவதற்கு நிதிஓதுக்கப்பட்ட நிலையில் அதில் திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ 19 கோடியே 27 லட்சம் மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியானது மாவட்டத்தில் மூன்றரை லட்சம் ஏக்கரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரையில் சம்பா சாகுபடியில் நேரடி நெல் விதைப்பாக 32 ஆயிரம் ஏக்கரிலும், சாதாரண மற்றும் இயந்திர நடவு மூலம் 33 ஆயிரம் ஏக்கரிலும் என மொத்தம் 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியானது நடைபெற்றுள்ளது.
மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான மத்திய கால நெல் ரகங்களான ஐ.ஆர்.20, ஆடுதுறை 54, கோ 50, சொர்னாசெப் உள்ளிட்ட விதை நெல்கள் மொத்தம் 220 டன் அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், தேவையான அளவு இடுபொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் (பொ) லெட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.